Tuesday, July 26, 2011

பேறுகாலப் பிரிவு…


அம்மா வீட்டில் மனைவி, பேறுகாலத் தனிமை கணவனுக்கு, வாரம் ஒருமுறை ஆகிப் போன சந்திப்பு. அப்பொழுது…

உன் அருகாமை
இல்லாத இரவுகளில்
தனிமைச் சாயம்
பூசிக் கரையும் என்
நினைவுகள்
வெறுமை வாசம்
வீசிக் கலையும் என்
கனவுகள்
இனிமை தாகம்
வேண்டிக் காயும் என்
கவிதைகள்…
—————————————————————————————————–
வாரம் இருநாள்
உன்னோடு
மீதம் ஐந்து நாள் உன்
நினைவோடு
இது விரும்பியே வரித்துக்
கொண்ட வனவாசம்
வாசத்தின் இறுதியில்
உதித்திடும் புது நேசம்..
—————————————————————————————————–
நிதம்
நம் படுக்கையறை
விளக்குகளிடம்
வேண்டிக் கொள்கிறேன்
நீ இல்லாத இரவுகளில்
நான் துவண்டு தவித்த
காட்சிகளை
உன்னிடம் ஒப்புவிக்க
வேண்டாமென்று…
—————————————————————————————————–
என் ஒருவாரத்
தவிப்பும்
பல நூறு மைல்
களைப்பும்
கோடை மழைக்
குளிரென
சட்டெனக் காய்கிறது
உன் முதற் பார்வைக்
கதகதப்பில்..
—————————————————————————————————–
ஆகாய வெளியில்
புள்ளியெனச் சுருங்கி
மறையும் விமானமென
என் தவிப்புகளின்
நீள அகலம் கரைக்கிறாய்
உன் விழி பேசும் மௌனத்தில்..

No comments: