Tuesday, July 19, 2011

நித்தம் தேயும்..

“லேர்ன் சம் பேசிக் இங்கிலீஷ்”
தமிழ்த் தெருவோரம்
இளநீர் கடை விரித்தவனிடம்
அயல்மொழியான் ஒருவன்
செய்த ஆங்கில விற்பனை
விலையாய்க் கேட்டது
தமிழ் நிலத்தின் தன்மானத்தை..

“நீயே பாத்து சொல்லிடு”
நினைவு தெரிந்த நாள் முதல்
உணவுப் பட்டியல் பார்த்துப்
பிடித்ததை வாங்கித் தந்த அப்பா
இன்று தான் படித்ததைக் காணாமல்
கையில் திணித்தார்
ஆங்கிலம் அடைகாக்கும் ஆகார அட்டவணை,
அது ஆணவமாய்க் கேட்டது
தமிழ் அறிந்தோரின் தன்னம்பிக்கையை..

“பாதி இங்கிலீஷ்ல பேசறாங்க என்ன புரியுது”
தாய்மொழி தவிர்த்த வைத்தியர்
வாய்மொழி புரியாது
உடல் நோவுடன் உள்ளமும் நொந்து
அத்தை வருத்திய கனம்
இருக்கும் வீட்டில்
இரண்டாம் தாரப் பிள்ளையானது
என் வீட்டுத் தமிழ்…

கவிதையாய்ச் சொன்னதால்
இவை கற்பனையன்று,
எனைக் காயம் செய்த காட்சிகளின்
கூட்டுத்தொகை..

காலனிய ஆட்சியின்
கடைசிச் சாட்சியாய் நிற்கும்
அவர் மொழி ஆதிக்கம்
அறியாததன் வினை..

இந்த அறியாமை அகற்றி
அடமானம் மீட்காவிடில்
அந்திக் கடலில் கரையும்
கதிரவனென
நம் நடையில் மறையும்
தமிழென்னும் கலை…

No comments: