Saturday, March 17, 2012

இணையம்

இது இணையம் இமயம் அளவு வளர்ந்து நம்மை ஆட்கொண்டிருக்கும் காலம். இந்த நுட்பம் நமக்கு மேற்கத்திய உலகில் இருந்து வந்ததாலோ  என்னவோ இத்தனை நாள் இந்த நுட்பம் நமக்குகந்த பொருட்களுக்கான சந்தையாக இல்லை.  மாறாக மேற்கத்திய உலகின் பொருட்களையோ அல்லது அவர்களின் கருத்துக்களையோ முன்னிறுத்தும் ஓர் ஊடகமாகவே இருந்து வந்துள்ளது.  ஆனால் இன்று நிலைமை சிறிது மாறத் துவங்கி உள்ளது அங்கொன்றும் இங்கொன்றும் ஆக நம் மக்களுக்கான, நம் சமூகத்துக்கான இணையதளங்கள் மெல்ல முளைக்கத் துவங்கி உள்ளன. இத்தகைய தளங்களை பேணிப் பெருக்க வேண்டிய கடமையும் கட்டாயமும் கண்டிப்பாய் நமக்குண்டு. மேற்கூறியதுபோல் முளைத்துள்ள/என் கண்ணில்பட்ட சில தளங்களின் விவரம் இங்கே,


www.nativespecial.com - பொதுவாக நம் பகுதியில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒரு சில பொருட்கள் அந்தந்த ஊர்களில் வாங்கினால்தான் அதன் உண்மை சுவை தரும்.  எடுத்துக்காட்டாக தூத்துக்குடி மக்ரூன், ஒரு முறை தூத்துக்குடி சென்றபோது இதனைச் சுவைத்தேன்.  குறைந்தது இரண்டு நாளாவது அந்த சுவை என் நாவிலும் மனத்திலும் ஒட்டி இருந்தது.  நான் இருக்கும் இடத்தில இருந்து தூத்துக்குடி வெகு தூரம் மக்ரூன் வாங்குவதற்காக அவ்வளவு தூரம் பயணம் செய்ய வாய்ப்பில்லை ஆனால் சுவை கண்ட நாக்கு சும்மா இருக்கவில்லை.  அப்பொழுது இணைய வழியில் இது கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தேடிய போதுதான் இந்த இணைய தளம் என் கண்ணில் பட்டது. உடனே ஆர்டர் செய்தேன் மூன்றாவது நாள் வீட்டுப் படியில் மக்ரூன், அதைப் பிரித்துச் சுவைத்த போது அவ்வளவு ஆனந்தம். இவர்கள் ஒவ்வொரு ஊரின் சிறப்பு மிக்க பொருட்களை இந்த தளத்தில் விற்பனை செய்கிறார்கள்.  ஒரு பொருளின் சொந்த ஊர் சுவையை மக்களிடம் கொண்டு செல்வதே இவர்களின் நோக்கம்.  திருநெல்வேலி அல்வா என்று கூறிக்கொண்டு தெருவுக்கொரு கடை முளைத்திருக்கும் நேரத்தில் நம் உண்மைச் சிறப்புகளையும், சுவைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் இவர்களது முயற்சி கட்டாயம் நம்மால் அங்கீகரிக்கப் பட வேண்டியது.


www.kuppathotti.com - நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக நாம் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கும் கழிவுப் பாசறைகளைச் சுருக்க ஓர் முயற்சி.  இவர்கள் தளத்தில் உங்கள் பெயர் முகவரியைப் பதிவு செய்து கொண்ட பின்னர் இவர்களை அழைத்தால் உங்கள் வீடு தேடி வந்து குப்பைகளை எடுத்துக் கொண்டு அதற்குத் தகுத்த பணத்தையும் கொடுத்துச் செல்கிறார்கள்.  மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்து இவர்கள் மறு சுழற்சிக்கு அனுப்புவதால் சுற்றுச் சூழலுக்கு மிகப்பெரும் நன்மை ஆகிறது.  இவர்களை அழைக்கும் முன்பு குறைந்தது பத்து கிலோ எடைக்கு குப்பைகள் உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

இது போன்று நமக்கும் நம் மக்களுக்குமான இணையதளங்கள் பெருக வேண்டும்.  அதற்கு இது போன்ற இணைய தளங்களை நாம் ஆதரிக்க வேண்டும்.  

நாம் வளர நம் சொந்த ஊர்ப் பொருட்களின்  சந்தையைப் பெருக்க வேண்டும்.

No comments: