Wednesday, December 16, 2009

தமிழ் (சு)வாசிப்பவர்க்கு...


மூன்று மாதங்களுக்கு முன்பு தேவையற்ற இடங்களில் ஆங்கிலம் பேசுவது பற்றி  நீயா? நானா?  நிகழ்ச்சியில் நடந்த விவாதத்தில் இருந்து ஒரு பகுதி.
(உரையாடிய பெண்களின் பெயர் நினைவில் இல்லாததால் அங்கவை, சங்கவை என்று வைத்துக் கொள்வோம்)
அங்கவை:  சார்..  ஜூஸ் கடைல போய் one pomogranate pleaaaaasssssssse!! அப்படினா   அவனுக்கு என்ன சார் புரியும்
சங்கவை:  சார்..  அப்படி கேட்டாதா சார் ஒரு கெத்தா இருக்கு..
(இப்போ நாரதருக்குப் படிச்ச நம்ம கோபி களத்துல எறங்கறார்)
கோபி: சரி அங்கவை நீங்க எப்படி கேட்பீங்க..
அங்கவை: அண்ணே ஒரு சாத்துக்குடி குடுங்க… அப்படின்னு கேட்பேன் சார்..
கோபி:  சரி pomogranate க்கும் சாத்துக்குடிக்கும் என்ன வித்யாசம்னு நெனைக்கறீங்க..
அங்கவை:  வேற ஒன்னும் இல்ல சார் pomogranate மொதல்ல வரும் சாத்துக்குடி ரெண்டாவது வரும்…
மிக எளிதாக நம் சமூகத்தின் மன நிலையை உணர்த்தும் உரையாடல் இது.  இன்று பெரும்பாலான நாம் இந்த குளிர்பானக் கடைக்காரர் போல அறிவுக்கும், மரியாதைக்கும் நிகராய் நம் மனத் தராசில் ஆங்கிலத்தை வைத்து நிறுத்துப் பார்க்கும் வியாபாரியாகத்தான் இருக்கிறோம்.  இந்தச் சந்தையில் நம் விலை கூட்டவே முடிந்தவரை நமது சொற்றொடர்களை ஆங்கிலப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.
ஆங்கிலேயரைத் துரை என்று துதித்த காலத்தில் வேர்விட்ட இந்தச் சிந்தனை இன்று நம் சமூகத்தின் ஆழத்தைத் தொட்டிருக்கிறது.   இதனால்தான் pomogranate க்குக் கிடைக்கும் மதிப்பு சாத்துக்குடிக்கு இல்லை.  இந்த அல்லக்கை வேர் அகற்றப் படவில்லையெனில் அடுத்த இரண்டு தலைமுறையில் நம் ஆணி வேரே ஆட்டம் காணும் நிலை வரும். சரி இப்பொழுதே வேரறுக்க வெற்றிவேல் வீரவேல் என்று கிளம்பலாமா என்றால்…  அது இப்பொழுது செய்ய வேண்டிய வேலை இல்லை  :-( . சிறுநீரகம் சிதைந்து கோமாவில் இருப்பவனுக்கு முதல் தேவை உயிர்வாயு பிறகுதான் அறுவை சிகிச்சை.
எனவே அதிவேகமாய் மாயமாகி வரும் நம் பேச்சு வழக்குத் தமிழ் சொற்களை மீட்டெடுப்பதே இன்றைய முதல் தேவையாகும்.  மேலோட்டமாகப் பார்த்தால் நாம் பேசுவதில் என்ன குறை என்றே தோன்றும்.  சற்று கவனித்துப் பாருங்கள் நீங்கள் இழந்து கொண்டிருப்பது உங்களுக்கே விளங்கும்…
எடுத்துக்காட்டாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் எளிய சொற்றொடர்களைப் பாருங்கள்…
டேய் இன்னைக்கு night எங்க uncle வர்றாரு..
ஒரு five minutes wait பண்றியா
Ok Bye..
கொஞ்சம் different அ try பண்ணிருக்கலாமே…
House Owner Gate அ   lock  பண்ணிடுவாங்க..
இது போல் அடுக்கிக் கொண்டே போகலாம்..  இந்த ஐந்து தமிழ் வரிகளில் உள்ள ஆங்கில வார்த்தைகள் 12, தமிழ் வார்த்தைகள் 9. இது மிகச்சாதரணமாக நம்மிடையே உலவும் வாக்கியங்கள்தான்.  ஒரு இரண்டு மணி நேரம் நம் உரையாடலை நாமே கவனித்தால் நாம் தமிழ் பேசும் அழகு நமக்கே விளங்கும்.  நாம் வேண்டுமென்றே இப்படிப் பேசுவதில்லை நமக்குப் பழகிவிட்டது அல்லது பழக்கப்படுத்தப்பட்டது.   ஆனால் பேசும்பொழுது கொஞ்சம் கவனத்துடன் பேசினால் கண்டிப்பாக பல வார்த்தைகளைத் தவிர்க்கலாம்.
டேய் இன்னைக்கு ராத்திரி எங்க மாமா வர்றாரு
ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கியா
சரி பார்க்கலாம்
கொஞ்சம் வித்யாசமா பண்ணிருக்கலாமே…
வீட்டுக்காரங்க கதவ பூட்டிடுவாங்க…
இந்த சொற்றொடர்களும் இயல்பானவையே, இப்படிப் பேசுவதற்காக உட்கார்ந்து நாம் தனியே நேரம் செலவிடத் தேவையும் இல்லை, அகராதி புரட்டி மெனக்கெட வேண்டிய அவசியமும் இல்லை. இதற்குத் தேவை எல்லாம் பேச்சில் கொஞ்சம் கவனம் அவ்வளவுதான்.
கடந்த நான்கு மாதங்களாக சிறிது கவனத்துடன் பேசியதால் நான் இயல்பாய்ப் பயன்படுத்தி வந்த பல ஆங்கில வார்த்தைகள் இன்று என் பேச்சில் இல்லை. இப்பொழுதுதான் என்  பேச்சே எனக்குப் பிடிக்கிறது :-)
ஆனால், கார், கம்ப்யூட்டர் போன்ற நமது பேச்சுவழக்கில் வேரூன்றி விட்ட சில  சொற்களை இப்போதைக்குக் கொஞ்சம் விட்டுத்தான் ஆக வேண்டும்.  ஏனெனில் காருக்கு மகிழுந்து என்று காண அகராதி புரட்டத் துவங்கினால் அலுத்துப் போய் உள்ளதையும் விட்டுவிடுவோம்.  எனவே முதலில் இருப்பதைக் காப்போம் பிறகு இழந்ததை மீட்போம்.
ஏற்கனவே சிப் முதல் ஹர்ட் டிஸ்க் வரை புதுக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஆங்கிலப் பெயர்களாகவே நம்மிடம் உலவுகின்றன இனி இருக்கும் சொற்களையும் தாரை வார்க்கத் துவங்கினால் தங்க்லீஷ் என்ற மொழி உருவெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.  பிறகு இதற்காகத்  தனி மாநிலப் போராட்டம் கூட வெடிக்கலாம் யார் கண்டது.
சரி நாம் பத்துப் பேர் இப்படிப் பேசுவதால் ஊரே மாறிவிடப் போகிறதா என்றால் இல்லை, ஆனால் நாம் பத்துப் பேராவது இப்படிப் பேசலாமே என்ற எண்ணம் தான் என் பதிவிர்க்குக் காரணம்.
குட்மார்னிங் தொடங்கி குட்நைட் வரை
சண்டே தொடங்கி சாட்டர்டே வரை
ஜனவரி முதல் டிசம்பர் வரை
சம்மர் முதல் வின்டர் வரை
அனைத்திலும்  ஆக்கிரமிக்கப் பட்டு
அன்னை வீட்டில் அந்நியப்பட்டத்
தமிழ் மகள்
தன் மிச்சம் காக்கத்
தஞ்சம் புகுந்தாள் தமிழ்ச்  சங்கங்களில்
தன் புதுமை சொல்லப்
படர்ந்தேறினால் வலைப் பக்கங்களில்
இப்படி இங்கும் அங்குமாய்ப் புகுந்து
காலச் சுழலில் சிதையாமல் நிலைத்து
எஞ்சி நிற்கும் சொச்சத்தை
விதை என்றெண்ணி விருட்சம் செய்வதும்
வெறும் களை என்றெண்ணி கழித்து எறிவதும்
இக்கவி தாங்கும் நம் கைகளில்…
இப்பதிவைப் படித்தவர் அனைவரும்  கண்டிப்பாக இதனைச் செய்ய வேண்டும் என்று கட்டளை இட நான் உங்கள் மேலாளர்  அல்ல.  இப்படி செய்து பார்க்கலாமே என்ற வேண்டுகோள் ஒன்றை முன் வைப்பவன் அவ்வளவே.  பிடித்திருந்தால் உங்கள் முயற்சியை உடனே துவங்குங்கள் இல்லையெனில்  அன்னை மொழிக்கே அகராதி தேடும் ஓர் ஊனமுற்ற சமூகத்தை நாம் வளர்த்து வருகிறோம் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
இதில் ஒத்த கருத்தோ, எதிர் கருத்தோ எது இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
ஆங்கிலம் பேசக் கூடாது என்பது என் வாதம் அல்ல..  தமிழைத் தமிழாகப் பேச வேண்டுமென்பதே என் ஆதங்கம்.

4 comments:

sumikutty said...

அட்டகாசமான மிகத்தேவையான இடுகை.. நானும் இன்று முதல் முயற்சி செய்யப் போகிறேன்..

pallavaveeran said...

அருமையான பதிவு!! சோப் என்பதற்க்கு தமிழ் வார்த்தை என்ன என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும். அப்படியே தெரிந்திருந்தாலும் கடைகளில் தமிழில் அதனைக் கேட்டு வாங்க முடியுமா?? இந்த நிலை மாற நம்மால் முயன்றதைச் செய்வோம்!!

பார்த்திபன் said...

நாளுக்கொரு வார்த்தை நம் அகராதியை விட்டு அகன்று கொண்டிருப்பது முற்றிலும் உண்மை.. அவ்வளவு எளிதில் இதைக் களைய முடியாது. ஏனெனில் மக்களின் அன்றாட உரையாடல்களில் கலந்துவிட்டவை அவை..
நம்மால் இயன்றதை நம்பிக்கையுடன் செய்வோம் செய்வோம்..

பார்த்திபன் said...

அட்டகாசமான மிகத்தேவையான இடுகை.. நானும் இன்று முதல் முயற்சி செய்யப் போகிறேன்.