Friday, July 3, 2009
பாட்டி வீட்டில் பதினாறு..
சிறு வயதில் தன் பாட்டி வீடே உலகமென்று வளர்ந்து, பின் வாழ்க்கையென்னும் அதிவேக நீரோட்டத்தில் விழுந்து, பாட்டியைக் காண நேரமின்றி, பல வருடம் பிரிந்திருந்து. இன்று இறப்புக்குக் கூட வர முடியாமல் அலுவல் காரணமாக பதினாறாம் நாள் வந்து சேர்ந்திருப்பவனிடம்…
பாட்டி வீட்டில் பதினாறு..
பகலவன் துயிலும் மாலை நேரம்
பாட்டி வீட்டு வாசலோரம்
வாடைக் காற்று வந்து சென்றது - என்
ஆடை மெல்ல விலக்கிச் சென்றது
வாசற்க் கதவைத் திறந்து விட்டது!!
அஃது
யரோ விசும்பக் கேட்டேன்
நாலு பக்கம் நானும் பார்த்தேன்
கண்ட பக்கம் காட்சி இல்லை
காதுகளுக்கோ சாட்சி இல்லை
யாரழுவது என்றதட்டினேன்..
அழுகை ஆனது அசரீரீ
அடுத்துக் கேட்டது பல கேள்வி!!
நீ பாட்டி மடி சாஞ்சிக்கிட்டு
நிதமும் கதை கேக்கயிலே
நானுஞ்சேந்து கேட்டதெல்லாம்
உனக்கு இப்போ மறந்திடுச்சா!!
நீ அறை டௌசர் போட்டுக் கிட்டு
ஆட்டம் பாட்டம் போடறப்போ
மேல ஏறி மிதிச்சதெல்லாம்
உனக்கு இப்போ நினவிருக்கா!!
நீ முதல் முதலா நடை பழகி
என் புதுப் பூச்சு மேலேறி
பிஞ்சுக் காலால் பதிச்ச தடம்
என் நெஞ்சுக் குழி மேலிருக்கு…
அது ஆறுதலாய்த் தானிருக்கு!!
உன் பாட்டி விட்டுப் போகையிலே
நான் பாடை சுமந்து நிக்கையிலே
நீயும் வந்து பாத்திடுவ - என்
மேல சாஞ்சு அழுதிடுவ
என்று நானும் நெனச்சிருந்தேன்
என் சோகம் தீர்க்கக் காத்திருந்தேன்..
நீயும் வந்து சேரலியே - அந்தக்
கிழவி முகம் பார்க்கலையே
எனைப் பார்த்துக்கிட்ட ஒரு சீவே
அதுவும் போயிச் சேந்திடுச்சு
என்னக் கூட்டிப் போக மறந்திடுச்சு!!
நீ சாஞ்சு அழத் தாயிருக்கா
நான் சேர்ந்து அழ யாரிருக்கா??
அனாதையா ஆயிப்புட்டே
யாருமத்துப் போயிப்புட்டேன்
முடிஞ்சா என்ன பாதுக்கோய்யா
இல்ல இடிச்சுப் போட்டுப் போயிடுய்யா..
அசரீரீயும் அழுகையும் மெல்ல நின்றது..
களைப்புற்று இளைப்பாறும் களமாக
நான் நடக்கப் பிடிக்கும் தோளாக
பல சமயம் எனைத் தாங்கும் தாயாக
என் ஆரம்ப நாட்களின் அச்சாணியாயிருந்த
பாட்டி வீட்டுத் திண்ணையின் தீனக் குரல்
உரலாக என் மனதை இடிக்க…
அவள் மடி சாய்ந்து அழத் தொடங்கினேன்
பைத்தியம் என்றார் பக்கத்து வீட்டுக்காரர்!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment