என்னப்பா சக்திவேலு மாப்ள முத்து எப்ப வர்றாப்ல??
என்னண்ணே இப்டி பங்காளிங்கல்ட கூட சொல்லாம கொள்ளாம முகூர்த்தம் வெச்சுபுட்டீங்க??
ஐயா வாழ மரம் பாத்து வெச்சாச்சு சொன்னிகன்னா வீட்ல எறக்கிரலாம்!!
என்னப்பா சக்தி கல்யாணம் பயலுக்கா உனக்கா!!
நொடிக்கொன்றாய் சக்தியை நோக்கி நீண்டன உரிமைக் கோபங்களும், யதார்த்த விசாரிப்புகளும். அனைத்தையும் தன்னுள் கிரகித்து தனக்கே உரிய பொறுமையுடன் கண்ணால் சிரித்து கனிவாய் பதிலளித்து தன் வீட்டை நோக்கி நடந்தார் சக்தி.
தன் காதலின் வடிவமெனக் கண்ணில் வைத்துக் காத்து வந்த துணைவியைத் தன் மணவாழ்வின் அஸ்திவாரக் கட்டத்திலேயே கோவை குண்டு வெடிப்பிற்குப் பலி கொடுத்தார் சக்தி.
சில நாட்களில் உறவுக்கு வந்த சொந்தங்கள் ஊர் பார்த்துக் கிளம்ப. ஆனந்தம் மட்டுமே நிறைந்திருந்த வீட்டில் சக்தியும் அவரது ஆறு வயதுக் குழந்தை முத்துவும் மட்டும் அனாதையாக . அவர்களின் நாட்கள் அண்ணாச்சிக் கடை புரோட்டாவுடனும், பக்கத்து வீட்டு அக்காவின் உபகாரங்களுடனும் மெல்ல நகர்ந்தது…
தன் மழலை உலகின் அத்துனை நொடியிலும்
அன்பும், அரவணைப்புமாய்க் கலந்திருந்த
அருமை அன்னையின் அறிவிப்பற்ற நிரந்தரப்
பிரிவால் வெறுமையாகிப் போன நொடிகளின்
பிடியில் பாலைவனப் பயிராய் வாடியது
பச்சைக் குழந்தையின் பிஞ்சு மனசு!!!!
ஒரு நாள் காலை…
மௌனத்தில் இருண்டிருந்த வீட்டின் அமைதியைக் குழைத்துக் கனைத்தது தொலைபேசி. சலனமற்ற தந்தையையும், தொலைப்பேசிக் கதறலையும் மாறி மாறிப் பார்த்த முத்து மெல்ல எழுந்து கண்களைக் கசக்கியபடித் தடுமாறிச் சென்று தன் மழலை மொழியில் அழைப்பை அங்கீகரித்தான்..
முத்து: அலோ!!(சோகம் இழையோடும் குரலுடன்)
எதிர்முனை: மிஸ்டர், சக்திவேல் இருக்காரா..
முத்து: அப்பா தூங்கறாங்க நீங் யாருங் பேசறது!!
எதிர்முனை: நான் உங்க மிஸ் பேசறேன் அப்பாவக் கொஞ்சம் கூப்பிட்ரியாப்பா
முத்து: சரிங் மிஸ்……
என்று சொன்ன மறுகனம் தந்தையிடம் இருந்தான் முத்து. தொட்டில் குழந்தையாய்க் கட்டிலில் துவண்டிருந்த தந்தையைத் தன் பிஞ்சுக் கரங்களால் தட்டி எழுப்பி தொலைபேசியிடம் இழுத்து வந்தான்.. முத்துவைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டி சக்திவேலிடம் தலைமை ஆசிரியர் கேட்டுக்கொள்ள, முத்துவைக் குளிக்கச் சொல்லிவிட்டு அண்ணாச்சி கடைக்கு நடையைக் கட்டினார்…
தந்தையைப் பின்னோக்கிச் சென்ற முத்துவின் பார்வை எதிர்வீட்டுச் செல்வனிடம் நிலைகொண்டது. அவன் தாயார் அவனை மடியில் இருத்தி தலை துவட்டி விடுவதைக் கண்டு கோடை கால நீர் வீழ்ச்சியெனக் குறுகுறுத்தக் கண்ணீர் மெல்ல வடிந்து வாடிய முகத்தில் வறட்சி நீக்கியது…
"உலகிற்க் கொடியது யாதெனின் தாய்பிரிந்து
சேய் பெரும் ஏக்கம்"
அப்பொழுது தம்பியைக் காண அங்கு வந்த முத்துவின் அத்தை, தான் நிற்பது கூட உணராமல் காற்றில்லாமல் திரியிடப்பட்ட தீபம் போல் அசையாது நின்ற மருமகனின் கண்ணீர் கண்டு கண் கலங்கினால்.
சிறிதுநேரம் மருமகனை மடியில் தாங்கியவள் சக்திவேலிடம் மெல்ல பேச்சைத் துவங்கினாள்
'இந்த பாருடா சக்தி இனி எம் புள்ளைய உன்கிட்ட விட்டுட்டுப் போறாப்ல இல்ல, இங்கயே உட்டா புள்ள ஏங்கி ஒன்னும் இல்லாம சீரழிஞ்சு போயிரும்.. நீதான் கொஞ்சம் தனியா இருந்து பழகிக்கணும் …..'
தனி ஆளாக தாயில்லாத குழந்தையை வளர்ப்பது நதிநீர் இணைப்பை விடக் கடினமான காரியம் என்று தெரிந்திருந்தும் மகனைப் பிரிய மனமில்லாமல் அக்காவின் ஆசையை நிராகரித்தார் சக்தி.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ரயில் தண்டவாளம் போல் நீள, முடிவு முத்துவிடம் கொடுக்கப்பட்டது,
லாப நஷ்டங்களைக் கணக்கிடாமல் மனதின் விருப்பத்தைத் தடையின்றி சொல்லும் வயது. முற்றத்தின் தூணைப் பற்றி நின்ற முத்து விறுவிறுவெனச் சென்று தந்தையின் ஆள்காட்டி விரலைப் பற்றி நின்றான்.
அன்று முதல் சக்தியின் நிழல் கூட முத்துவுக்கு நிழல் கொடுக்கவே தரை கண்டது. முத்துவின் ஒவ்வொரு அசைவும் அவர் மனதின் ரணத்திற்கு மருந்திட்டது.
தினமும் தேய்பிறை எனத் தேய்ந்து தன் குழந்தையை முழு மதி ஆக்கினார்.
முத்து தன் படிப்பை முடித்து நல்ல வேலையில் சென்னையில் இருக்கிறான். தற்பொழுது பயிற்சிக்காக இரண்டு வாரம் மும்பை சென்றிருக்கிறான், திருமணமும் நிச்சயிக்கபட்டாகிவிட்டது. இன்னும் திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் அடுத்த ஆறு மணி நேரத்தில் கோவை விமான நிலையம் வந்திறங்க உள்ளான்.
வழி நெடுக நீண்ட கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு வீடு வந்து சேர்ந்தார் சக்தி. திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக அக்காவின் தலைமையில் அரங்கேறிக் கொண்டிருந்தது. மணி முள் பதினொன்றைத் தொடக் காத்திருந்தது.
மகன் கிளம்பும் நேரமாயிற்றே என்று தொலைபேசி எடுத்து மகனின் என்னை அழுத்தினார்.
முத்து: அப்பா..
சக்தி: தம்பி கிளம்பிட்டியா..
முத்து: இப்போதான் துணி மணிலாம் எடுக்க வீட்டுக்கு போறதுக்கு
ட்ரைன்க்கு காத்திட்டிருக்கேன்..
சக்தி: சரிய்யா சீக்கிரம் வா இங்க எல்லாம் மாப்ள எங்க எங்கனு கேட்கறாங்க..
முத்து: சரிப்பா நீங்க போய் தூங்குங்க நான் கோழி கூப்புட வந்திருவேன்.
மகனைக் காண இருக்கும் மகிழ்ச்சியில் கண்கள் இருள மறுக்க, சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின் எழுந்து தொலைக்காட்சிப் பெட்டிக்கு உயிர் கொடுத்தார்.
அனைத்து அலைவரிசைகளிலும் ஏதோ ஒரு அவசரச் செய்தி சுழன்றுகொண்டிருக்க தனது மூக்குக் கண்ணாடியைத் தேடி எடுத்து சுற்றும் வார்த்தைகளைக் கண்ணில் நிறுத்தி வாசித்தார்.
ஆம், மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் பற்றிய செய்திதான் அது. சத்ரபதி ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதலைப் பற்றிப் படித்தவரின் கண்கள் செய்தியுடன் சேர்ந்து சுழலத் தொடங்கின. அடிமனதில் ஆயிரம் பிரளயம், கொதித்த இதயத்தில் புதைத்த நினைவுகள் நீராவியென மேலெழ உடல் நடுங்கி உள்ளம் வியர்த்தார்.
மற்ற அனைவரும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கிடைத்த இடத்தில் உறங்கும் பயணிகள் போல், ஆங்காங்கே உறங்கிகொண்டிருந்தனர். இன்னும் திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த செய்தியை யாரிடம் கூறி அழ முடியும்.
குரல்வளை சிக்கிய குண்டினைப் போல் உமிழவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் சக்தியின் உயிர் உண்ணத் துவங்கியது அந்தச் செய்தி. தளர்ந்த நடையுடனும், சுருங்கிய பார்வையுடனும் மெல்ல தொலைபேசியை நெருங்கி தட்டச்சுக் காகிதமெனத் தன் நெஞ்சில் மாறி மாறி அடித்த கேள்விகளுடன் மகனுக்கு அழைப்பு விடுத்தார்…
'தாங்கள் தொடர்பு கொண்ட என் தற்பொழுது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது'
கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் இதே வாசகம் காதில் ஒலிக்க அப்படியே தன்னை அறியாமல் கண் அயர்ந்தார் இல்லை மயங்கினார்…
காலை மணி ஆறு..
காலைக் கதிரவன் இருள் விழுங்கத் தொடங்கி இருந்தது, யாரோ அவரது அறையில் அவரைப் படுக்க வைத்திருந்தனர். கண் விழிக்கும் முன்னே அவர் மனது விழித்தது. அனைத்து கடவுளரையும் வேண்டித் தன்னைத் தானே திடப்படுத்திக் கொண்டு தன் இமை விளக்கினார்.
இந்த முறை அவருக்கு மூக்கு கண்ணாடி தேவைப் படவில்லை, ஆம் அவர் அருகில் அவரது குழந்தை…
வண்ணத்துப் பூச்சியின் சிறகைப் பிடிப்பது போல் மெல்லத் தன் மகன் கரம் பிடித்துக் கண் கலங்கினார்…
மகனின் மணத்தை நல்ல படியாக நடத்தி முடித்தார். ஆனால் அந்த இரவின் இரண்டு மணி நேரத் தவிப்பு அவரது மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
தீவிரவாதம் நம் ஒவ்வொருவரின் வீட்டின் வாசற்கதவையும் தட்டத் தொடங்கிவிட்டதாய் உணர்ந்தார். எனக்கென்ன எங்கோ குண்டு வெடிக்கிறது என்று இருக்கும் மக்களிடம் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கவனித்து ஆராயும் விழிப்புணர்வைக் கொணர நினைத்தார். எனவே தம் மீதி வாழ்நாளை மக்களின் மதி திறந்து புது விதி செய்ய அற்பணித்தார் சக்திவேல்….
"நம் சுற்றம் நம் கையில், விழிப்புடன் இருப்போம்; வினை முறிப்போம்"
No comments:
Post a Comment