Wednesday, February 3, 2010

ஆயிரத்தில் ஒருவன்.. கவிதையாய் ஒரு பார்வை.


இரண்டு வாரம் காத்திருந்து கடைசியாய் இரு நாட்களுக்கு முன் தான் இங்கு வெளியானது ஆயிரத்தில் ஒருவன்,  நாளுக்கு நாள் கூடியிருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்ற தேடலுடன் முதல் காட்சியைப் பார்த்தவன்  திக்கு முக்காடிப் போனேன்.  அதன் விளைவு இங்கே..
இது பட விமர்சனமோ, படத்தைப் பற்றிய என் பார்வையோ அல்ல.  இது நான் படம் பார்த்த விதம்..
வெளிவந்த
இரு நாளில்
இணையத்தில் இருந்தும்,
கைக்கெட்டியதை  கவ்விக்
கொள்ளாமல்..
காத்திருந்த இரு வாரம்
கடந்திருந்த இருள் நேரம்.
ஆரவாரம் அரவமற்ற
அரங்கினுள் அடிவைத்தேன்..
எட்டி எட்டி எண்ணி வந்தேன்
என் இருக்கை வந்தமர்ந்தேன்..
இருபதைத் தாண்டவில்லை
எண்ணிக்கையில் பிழையில்லை
விமர்சனங்கள் செய்த வினை
வேறெதுவும் தோன்றவில்லை.
இருந்தாலும் சிரித்துக் கொண்டேன்
“நான் கடவுள்” நினைத்துக் கொண்டேன்
அரங்கத் திரை விலக
ஓரிரு விசில்களுடன்
வெளிச்சம் வந்தான்
“ஆயிரத்தில் ஒருவன் ”
தெருக்கூத்தில் துவங்கிய கதை
ஓர் அற்புதத்தின் ஆரம்ப விதை
நூறு மீட்டர் ஓட்டமென
ஆரம்பமே அத்தனை வேகம்..
தரம் குறைந்த கிராபிக்சுகள்
ஆங்காங்கே தலை தூக்கி
நிஜ உலகம் அழைத்து வர
சளைக்காமல் அடுத்த நொடி
நிழலுகம் கூட்டிச் சென்றனர்
அவருடனே பயணித்து
தடைகள் பல தாண்டி
வந்தடைந்த இடமொன்றில்
இடிந்திருந்த கிராமத்தில்
சிரித்திருந்த கோமகன் சிலை
என்னவோ செய்ததென்னை
நடு இரவில் துயில் எழுந்து
கனவொன்று கலைவதைப் போல்
இடை வந்த இடைவேளையில்
தடை பட்டதென் பயணம்
விடை பெற்றதென் கனவு
முதற்பாதி  அருமை என்றும்
பிற்பாதி கொடுமை என்றும்
எதுகை மோனையாய்ப்
பிதற்றிட்ட விமர்சனங்கள்..
கண் முன்னே விரிந்து நிற்க
மீதி இருந்த சமோசாவை
அவசரமாய்த் தீர்த்து விட்டு
மீண்டும் சேர்ந்தேன் என் இருக்கை
துவங்கியதொரு புது யுகம்
வேகமாய் வந்த படம்
காவியமாகத் துவங்கிய இடம்..
கற்பனையும் செய்ததில்லை
தமிழ்த்திரை தந்த காட்சிகளை..
அரசனின் அறிமுகக் காட்சி
மீண்டும் கேட்டது மன்னராட்சி
“புலிக் கொடி பொறித்த
சோழ மாந்தர்கள்
எலிக் கரி கொறிப்பதுவோ”
வலியில் ஒலித்த வரிகள்
ஒன்றினைத்ததென்னை
சோழர் கூட்டத்தில்.
குண்டுச் சண்டை தவிர்த்து,
தொடர்ந்து விரிந்த
நிகழ்வுகள் அனைத்தும்
அருகில் உணர்ந்த அனுபவம்..
உச்சகட்ட வேளையில்
சூழ்ச்சிக்குத் தோற்ற வீரம்
மொத்தமாய்க் கட்டுண்ட நேரம்
“எம் தஞ்சை யாம் பிறந்த
பொன் தஞ்சை
விரலைந்தும் தீண்டாமல்
வேகமட்டோம் ”
என்ற நூற்றாண்டுக் கனவின்
இடிபாடுகளில் விளைந்த
வரிகளின் பாதிப்பில்..
அகல மறுத்த நினைவுகளுடன்
அரங்கம் விட்டகன்றேன்
இரவு வெளுத்த நேரம்
“என் தஞ்சை”  முனுமுனுத்து
எழுந்து நடந்தவன்
விக்கியில் சோழர் வரலாறு
தேடிக் கொண்டிருந்த
நண்பனிடம் கண்டுகொண்டேன்
செல்வராகவன் வென்றதை..

குறைகள் சில இருப்பினும் துணிந்த முயற்சிக்காய்ப் பாராட்டப் பட வேண்டிய படம்…

4 comments:

mvalarpirai said...

Good Review.we should encourage this good attempt and hard that has been put on this movie

டவுசர் பாண்டி said...

சில இடங்களில் சென்சார் செய்து கடுப்பேற்றி விட்டார்கள் !! நான் ஒலி பற்றி சொல்லவில்லை ஒளி , அத்துடன் வந்திருந்தால் இன்னும் நான்றாக இருந்திருக்கும் ,

இது படம் எடுத்து கல்லா கட்டும் சமாச்சாரம் இல்லை , ஒரு சோழன் , பாண்டியன் வரலாறு போல் , பிற் காலத்தில் சொல்லுவார்கள் செல்வராகவன் என்று ஒரு இயக்குனர் இருந்தார் என்று அதற்காக எடுக்கப் பட்ட படம் .

உங்கள் கவிதை நடை மிக அற்புதம் எதையும் விடாமல் ஒரு கதையை கவிதையாக்கியது சூப்பர் .

திவ்யாஹரி said...

சோழர் வரலாறு
தேடிக் கொண்டிருந்த
நண்பனிடம் கண்டுகொண்டேன்
செல்வராகவன் வென்றதை..

நண்பா.. படம் பார்த்ததும் சோழ வம்சத்தின் மீது ஆர்வம் வருவது உண்மை தான்..
கவிதை அருமை..வாழ்த்துக்கள்.

பார்த்திபன் said...

சரியா சொன்னீங்க வளர்பிறை...

பாண்டி.. ஆம் இது வரலாற்றைப் புரட்டி வரலாறான படம்..

மிக்க நன்றி ஹரி...