Sunday, November 22, 2009

வாடகைக் கனவு…


“ப்பா BSc எல்லாம் படிக்க முடியாது எப்ப பாரு அதையே கேட்காத… “  உறுதியாய் இருந்தது பாலுவின் குரல்.
“ம்ம்ம்ம்.. நம்ம ஊர் காலேசுல இலவசமா  படிச்சவனெல்லாம்  இன்னைக்கு நல்லாத்தான் இருக்கானுவ,
இவெ என்னவோ படிச்சா பிஇ தான் படிப்பேன்னு நிக்கறான் என்னவோ போ ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்”
புலம்பியது பொன்னனின் மனது
“இத பாருப்பா பிஇ சேத்துட முடியாதுனா சொல்லு சும்மா தொனதொனங்காத”
தந்தையிடமிருந்து வெடுக்கென்று கையை உருவிக் கொண்டு பேருந்தை நோக்கி ஓடினான் பாலு.நெற்றியில் திருநீரென சென்னை நாமம் தாங்கி வாயில் கவ்விய  வெளிச்சத்தைத் தரைக்குத் தெளித்து நின்றது திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகப் பேருந்து.  வண்டியின் நடத்துனர் ஊமையான கேப்டன் பிரபாகரனுக்கு ஒலி கொடுக்க, பெட்டிக்கும் ஒலிபெருக்கிக்கும் இடையே ஊஞ்சலாடிய மஞ்சள் ஒயரைக் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தார்.  கிளம்பும் நேரமாதலால் பேருந்தே பரபரத்திருக்க, 36 ஆம் (கடைசி ) எண் இருக்கை மட்டும் சலனமற்ற பாலுவைத் தாங்கி இருந்தது.  மெலிந்த தேகம், எண்ணெய் வைத்து இடது புறம் படிய வாரப்பட்ட முடி, இடுப்பை இறுக்கி இருந்த கனுக்கால் தொடாத கால்சட்டை, சாங்கீதத்திர்க்காக அணிவிக்கப்பட்ட பழைய பெல்ட், மடியில் துயின்ற பனிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ் என ஒவ்வொன்றும் பாலுவை ஒரு கீழ் நடுத்தரக் குடும்பத்து மாணவனாக ஊருக்கு அறிவித்துக் கொண்டிருந்தது.  இதற்குள் கேப்டன் பிரபாகரனைப்  பேச வைத்திருந்த நடத்துனர், “ஊருக்குப் போறது மட்டும் உள்ள நில்லு மத்ததெல்லாம் எறங்கு” என்று அக்றினையில் அறிவித்தார்.  குரல் கேட்டு நடத்துனரை நோக்கி நீண்ட பார்வையை, வலுக்கட்டாயமாக விலக்கிப் பேருந்தின் சாலறம் வழியே இன்னும் அதே இடத்தில் நின்ற தன் தந்தை மீது குவித்தான் .
அவரோ பின்கால் உயர்த்தி தன் உச்சகட்ட உயரத்தில் சாலையின் மொத்த நீல அகலத்தையும் அலசிக்கொண்டிருந்தார்.   விடிந்தால் ஒன்பது மணிக்கு மகனுக்குப் பொறியியல் கலந்தாய்வு, அடுத்த ஐந்து நிமிடத்தில் கிளம்பவிருக்கும் சென்னைக்கான கடைசிப் பேருந்து,  முதலாளியிடம் கடனாய்க் கேட்டிருந்த இன்னும் கைக்கு வந்து சேராத கலந்தாய்வில் கட்ட வேண்டிய முன்பணம் இவை அனைத்தும் பொன்னனின் இதயத் துடிப்பை இரட்டித்திருந்தது.   படமோ, பாடமோ, கனவோ, கண்ட காட்சிகளோ பாலுவின் உள்ளத்தில் விதைத்த பொறியியல் ஆசை இன்று அவன் மனதின் ஆழம் வரை வேர் விட்டிருந்தது.  நம்பிக்கையைத் தன் மீதும், தன் படிப்பு மீதும் வைக்காது  கிடைக்கும் பட்டத்தின் மேல் சுமத்தும் இன்றைய இளசுகளில் பாலு மட்டும் விதிவிலக்கல்ல. எனவே பொறியியல் படித்தே தீருவேன் என்று உடும்புப் பிடியாய் நின்ற மகனின் ஆசையை நிறைவேற்ற வேறு வழியின்றி தலை அசைத்திருந்தார் பொன்னன்.  விளைவு, இன்று உச்சந்தலைக் குருதி கொப்பளிக்க ஒரு கண்ணில் பேருந்தையும், மறு கண்ணில் சாலையையும் மாறி மாறி உள்வாங்கிக் கொண்டு நின்றார் பொன்னன்.
இதற்குள் சென்னைப் பேருந்தின் சக்கரங்கள் மெல்ல உருளத் தொடங்க நடத்துனரிடம் ஆளில்லா இருக்கைக்கு  அர்ச்சனை வாங்கிக் கொண்டிருந்தான் பாலு.  அப்பொழுது சஞ்சீவி கொணர்ந்த மாருதியென ஒரு பச்சை TVS 50 யில் தாடியும் மீசையுமாக முதலாளியின் பணத்துடன் அங்கு வந்து சேர்ந்தார் சிவப்பா.  ” கெளம்பறப்ப நம்ம சகல………………………”  என்று தொடங்கிய தாமத விளக்க உரை எதையும் காதில் வாங்காமல் கையில் இருந்த ரூபாயைப் பிடுங்கிச்  சட்டைப் பையில் திணித்துக் கொண்டு உருண்டு வந்த பேருந்தை நோக்கி ஓடினார்.  ஒரு வழியாக தட்டுத் தடுமாறி முன் படியில் ஏரியவருக்குக் காலைத் தேநீர் எனச் சுடச் சுடக் காத்திருந்தது நடத்துனரின் வசைச் சொல்.  “யோவ் எங்க உசுர வாங்கறதுக்குனே கெளம்பி வருவீங்களா சீக்கிரம் ஏறுயா லேட்டா வந்ததில்லாம உழுந்து கிழுந்து எங்க தாலிய அறுக்காத” .  கசங்கிய கதருக்கும், அறுந்த செருப்புக்கும் அங்கு இந்த மரியாதையே அதிகம்.  இதற்கெல்லாம் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் 35 ஆம் இருக்கையை நோக்கிச் சென்றார் பொன்னன்.ஒரு வழியாக 9 மணிக்குக்  கிளம்ப வேண்டிய வண்டி 9.20 க்கு பேருந்து நிலைய நுழைவாயில் கடந்து சென்னையை நோக்கிய தனது 9 மணி நேரப் பயணத்தைத் துவக்கியது.  வண்டி 50 கிமீ கடந்திருந்தது கேப்டன் உரக்கக் கர்ஜித்துக் கொண்டிருந்தார் ஆனால் பொன்னனுக்கும், பாலுவுக்கும் இடையே மட்டும் நிசப்தம் நிறைந்திருந்தது.  பொன்னனுக்கோ தகுதி மீறி இதைச் செய்கிறோமோ என்ற குழப்பம், பாலுவுக்கோ இப்படி எல்லோர் முன்னும் அவமானப்பட வேண்டியுள்ளதே என்ற ஆத்திரம். நடத்துனர் தனது வேலைகளை முடித்த உடன்  பேருந்து விளக்குகள் தங்கள் கண்களைச் சுருக்க கூடவே பாலுவும் கண் அயர்ந்தான்.  மெல்ல பாலுவின் முட்டி கைக்கும் முழங்காலுக்கும் இடையே  இறுக்கப் பட்டிருந்த சான்றிதழ்களைப் பத்திரமாக அன்று வாங்கிய புதுப் பெட்டிக்குள் வைத்து தன் இருக்கையின் கீழ் செருகினார்.  பின் மகனின்  தலை முடி கோதி மகனின் முகத்தை அருகில் கண்டு  ரசித்தவர்
“இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே” என்ற பழைய பாடலை உணர்வுடன் மனதுக்குள் முனுமுனுத்தார்.  சிறிது நேரத்தில், இருக்கையில் தலை சாய்த்து இடது கண்ணின் எல்லையில் முகாமிட்டிருந்த கண்ணீரைத் துடைத்துக்  கண்மூடினார்.
பொறியியல் பட்டமளிப்பு விழா மேடையில் தொப்பியுடன் நின்றிருந்த பாலு  ஏதோ கேட்டுக் கண் விழிக்கப்  பேருந்து விழுப்புரம் அருகே சாலையோர விடுதியில் நின்றிருந்தது.  கனவு கலைந்து விழித்த பாலு தன் தந்தையின் கையைத் திருப்பி நேரம் பார்த்துக் கொண்டான்.  மணி 5:15, விடிகாலைக் கனவு நிசமாகும் என யாரோ சொன்னது பாலுவின் நினைவுக்கு மகிழ்ச்சியைக் கூட்டி வந்தது.  உடனே கனவு மீண்டும் தொடரும் என்ற ஆசையில் கண்ணைக் கட்டாயப்படுத்திக் குவித்துத் தூக்கம் வேண்டினான்.  இரவும் சாப்பிடாததால் கெஞ்சத் துவங்கிய வயிற்றைச் சமாதானப்  படுத்தத் தேநீர் தேடி இறங்கிச் சென்றார் பொன்னன்.  சென்னைக்கு முதல் முறையாய்ப் பயணிக்கும் அவருக்கு சாலையோர விடுதிகளின் தரம் தெரிய வாய்ப்பில்லைதான்.
அந்த பொழுதில் பாலுவின் விதியின் நிழாகவோ அல்லது எதேச்சையின் நிறமாகவோ பேருந்தினுள் நுழைந்தாள் அவள்.  திருடச் செல்லும் படபடப்போ, மாட்டிக்கொள்ளும் பயமோ அவளிடம் இருக்கவில்லை.  நிதானித்து ஒவ்வொரு இருக்கையாய் நோட்டம் விட்டு, இன்றைய மனிதம் போல் பின்னோக்கி முன்னேறினாள் . சிறிது நேரத்தில் கடைசி இருக்கையின் கால்களுக்குள் ஒழிந்திருந்த பாலுவின் பச்சைப்  புதுப்பெட்டி அவள் கண்ணில் பட்டது.  பாவம் அவர்களிடம் புதிதாக இருப்பது அந்த பெட்டி ஒன்று தான் என்று அவளுக்குத் தெரியாது.  தூங்கிக் கொண்டிருந்த பாலுவும், அவரவர் வேலையில் மும்முரமாய் இருந்த பிற பயணியரும் அவளது பணியை எளிதாக்க பாலுவின் கனவுகளைக் கையோடு எடுத்துச் சென்றாள்.
இரவுநேரக் கடைகள் மூடப்படாத ரம்யமான இளங்காலை வேளை, சூரியனை முந்திக்கொண்டு கிண்டியில் கால் பதித்தனர் பொன்னனும், பாலுவும்.  பெருநகர வாசனை முதன் முதலில் அவர்களை நுகர்ந்தது.  கடந்த இரண்டு மணி நேரமாக பெட்டியைத் தேடியே பழக்கப் பட்டுவிட்ட  பொன்னனின் கண்கள் அனிச்சையாக அனைவரது கையிலும் பெட்டியைத் தேடியது.  நடுக்  காட்டில் பெட்டி தொலைந்ததென்று நின்ற பொன்னனைக் கண்டு முதலில் அடக்க முடியாத ஆத்திரம் பாலுவுக்கு.
 ஆனால் அதன்பின் அனைவரிடமும்  சண்டையிட்டு அரைமணி நேரம் வண்டியை நிறுத்தி பாத்ரூம் முதல் பாதி நிறைந்த குப்பைத் தொட்டி வரை யார் ஏளனத்தையும் பொருட்படுத்தாமல் அவர் பெட்டி தேடிய காட்சி பாலுவின் கோபத்தைச் செரிக்கத் தொடங்கி இருந்தது.
சிறிது நேரம் செய்வதறியாது புறாவைப் பறக்க விட்டுச் சிரித்த நேருவைப் பார்த்துக்   கொண்டிருந்த பொன்னன்  திடீரென ஏதோ யோசனை அகபட்டவராகத் தன் பையில் இருந்த காகிதத்தை எடுத்துக் கொண்டு அருகில் கண்ட STD பூத்திற்குள் நுழைந்தார்.  பெட்டி தொலைந்ததிலிருந்து கலங்கிக் கலையிழந்திருந்த பொன்னனின் முகம் பாலுவை என்னமோ செய்தது.  கொஞ்சம் கொஞ்சமாக பட்டத்தின் மோகம் குறைந்து தந்தையின் நியாயம் புரியத் தொடங்கியிருந்தது.
இதற்கிடையில் பூத்திலிருந்தவரின் உதவியுடன்   தனக்குத் தெரிந்த ஒரே நண்பனான வாத்தியை அழைத்திருந்தார் பொன்னன்.  அதிகமாக தொலைபேசியில் பேசி பழக்கம் இல்லாததால் கொஞ்சம் உரக்கவே பேசினார்.  கூண்டுக்குள் இருந்தபோதும் பாலுவின் காதுவரை அவரது குரல் தாராளமாக நீண்டது.சிறிது நேரம் அந்த உரையாடலைக் காதில் வாங்காமல் ஆசையுடன் பொறியியல் கல்லூரி பேருந்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென தடம் மாறிய ரயில் வண்டி எனப் பொன்னனின் உரையாடலைக் கேட்கத் தொடங்கினான்
”ஏம்பா அப்பன்னா அஞ்சாயிரம் இருந்தா பத்து நாள்ல சர்டிபிகேட் வாங்கீர்லாமா சரிப்பா ஒரு வேள  கஞ்சிய கொரச்சாவது காசு சேத்திடறேன், அவனாசப்படி காலேசுல சேக்கலேனா மனசொடிஞ்சு போய்டுவான் போல”
இதற்குப் பின் பேசியதும் பாலுவின் காதுகளில் ஏறவில்லை இந்த முறை பொறியியல் கனவல்ல காரணம்.
உரையாடல் முடித்து வெளி வந்த அப்பாவின் இடது கை மனிக்கட்டை இறுகப்பிடித்த பாலு கலங்கிய கண்களுடன் பத்து மணி நேர அமைதிக்குப் பின் பொன்னனிடம் சத்தியமான குரலில் கூறினான்   “அப்பா நான் BSc யே  படிசிக்கறேன்”

2 comments:

Anonymous said...

Neenga last year elthina paathai maariya payanam epo thaan parthen..unga friend ku apram ena achu

Anonymous said...

Nalla kadai. Paavam Balu.