ஈழத்தை நனைக்கும் இரத்த வாடை
நம் நாசிகளைத் துளைத்தும்
தாய்மடி தேடித் தவிக்கும் பிஞ்சுக்
குழந்தைகளின் நெஞ்சக் குமுறல்கள்
நம் செவிகளைக் கிழித்தும்
உரிமைக்காய் உயர்ந்த குரல்கள்
உதவிக்காய் நம் கரங்களை அழைத்தும்
கலையவில்லை நம் மௌனம்
கரையவில்லை நம் மனம்!!
நான், என், எனது என்ற
சுயநலச் சுழலில் சிக்கி ஊனமான என்
மூன்றாந்தர மனிதாபிமானத்தால் இவற்றை
எண்ணிக் கலங்கவும், கவிதை வடிக்கவும்
மட்டுமே முடிவதை எண்ணித்
தவிக்கிறேன் தனிமையில்!!
தமிழரின் இருண்ட காலமென்று
வரலாறு வரையப்போகும் கறுப்புச்
சரித்திரத்திற்கு சாட்சி கூறவா
எனக்கிந்தப் பிறப்பு??
கடலும் வானும் சிவக்க உரிமைக்காய்
ஓடும் குருதி ஓட்டத்தைக் கண்டு
கலங்க நினையாமல்
மட்டை ஆட்டத்தில் டோனியின் ஓட்டத்தை
எண்ணிக் களிப்புற்றிருக்கும் இக்கூட்டமா
பாரதியையும், பெரியாரையும் ஈன்றெடுத்தது ??
விடியல் தேடும் இவ்வினாக்களுக்கு
விடை தேடிப் பயனில்லை…
விடியல் தேடவோ ஆளில்லை…
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment