உதட்டுச்சாயத்தை உடம்பெல்லாம் பூசிக் கொண்டது போல் சிவந்து நின்றது காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம். தீபாவளி நாளான போதிலும் அன்று பரபரப்புக்குப் பஞ்சமில்லை. அலுவலகத்தின் முன், கையில் துப்பாகியும், தலையில் கனத்த தொப்பியும் வைத்து சீருடையில் வரிசையாய் காத்து நின்ற அதிரடிப் படையினர் மக்களுக்கு ஒரு காட்சிப் பொருளாகவே தெரிந்தனர்.
அலுவலகத்தினுள் சித்திரத்தில் சிரித்துக் கொண்டிருந்த காந்திக்கும், நேருவுக்கும் மத்தியில் காக்க காக்க சூர்யா போல் அமர்ந்திருந்த பரமன், ஏதோ ஒரு செய்தியை எதிர்பார்த்து நகத்தை மென்று துப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அறையின் நிசப்தத்தை எதிர்த்து தனியாக போராடிக் கொண்டிருந்த மின்விசிறியின் சத்தத்தைக் கிழித்துக் கொண்டு வந்தது ஓர் அவசரக் குரல்.
சார் இன்னைக்கு நம்ம சிட்டில பயங்கரவாத தாக்குதல் நடக்க போறதா நமக்கு கெடச்ச செய்தி உண்மைனு புலனாய்வுத் துறை உறுதி பண்ணிட்டாங்க.. சிறையில இருக்க அவங்க ஆளுங்கள விடுதலை பண்ண சொல்லி மெரட்றதுக்காக மக்கள பணயக் கைதியா பிடிக்கப் போறாங்களாம். கூடவே அவங்களுக்கு தெரிஞ்ச இன்பர்மேசன் எல்லாத்தையும் பேக்ஸ் பண்ணிருக்காங்க…
என்று ஒரே மூச்சில் ஒப்பித்த குரலுக்கு சொந்தமான கைகள் ஒரு காகிதத்தையும் பரமனிடம் நீட்டியது.
உளவுத்துறை பயங்கரவாதிகளின் தகவல் பரிமாற்ற அலைவரிசையை கண்காணித்ததில் கிடைத்த ஒரு சில வரித் தகவல் தான் அது..
தோ லாக் தியா…
தீன் கோம்ப்லக்சொங் மே
ஹமாரா பாயி கோ…
என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் சிந்திய வார்த்தைகளைச் சேகரித்து அனுப்பி இருந்தார்கள். வந்திருந்த தகவலை சில முறை கவனித்துப் படித்த பின் எதுவும் முழுதாய் விளங்காத போதும் இதற்குமேல் தாமதிப்பது ஆபத்து என்று உணர்ந்து உடனே அனைத்து அவசரகாலப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய உத்தரவிட்டார் பரமன். பின்பு பேக்ஸ் காகிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு அங்கிருந்த ஒற்றைக் கை ஊனமுற்ற நாற்காலியில் அசைவின்றி அமர்ந்தார். ஆனால்,அவரது கூறிய கண்களின் கருவிழிகள் மட்டும் இடமும், வளமும் இடைவிடாது அந்தக் காகித எழுத்துக்களில் தடம் பிறளாமல் உருண்டோடிக் கொண்டிருந்தன. பதினைந்து நிமிடத்தில் அந்த வார்த்தைகளை எண்ணற்ற வகையில் பிரித்து, சேர்த்து, கோர்த்த பிறகு இறுதியில் அதன் பொருளை ஒருவாறு ஊகித்தார்.
தியா - விளக்கு - தீபாவளியன்று
தீன் காம்ப்ளெக்ஸ் - மூன்று வணிக வளாகங்களில்
பாயி கோ - சகோதர்களை விடுவிப்பதற்காக
தோ லாக் - ??
அதாவது ஒரு மாதத்திற்கு முன் கைது செய்யப்பட்ட இவர்களின் தலைவர்களை விடுவிப்பதற்காக மூன்று வணிக வளாகங்களில் தீபாவளி அன்று மக்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைப்பதே இதன் உட்பொருள் என்று அவதானித்தார். ஆனால் இரண்டு லட்சம் என்பதற்கு மட்டும் விடை விளங்கவில்லை. இதை மட்டும் சரியாக ஊகித்து விட்டால் எப்பாடு பட்டாவது இன்றைய சதியை முறியடித்து விடலாம் என்று அவரது உள்மனம் உரக்கக் கூறியது.தமது ஊகங்களின் அடிப்படையில் படையினருக்கு பரமனின் கட்டளைகள் பிறந்தது. அடுத்த சில மணித் துளிகளில் அந்த ஊரில் இருந்த அனைத்து வணிக வளாகங்களும் அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டில் வைக்க பட்டது. விஷயம் அறிந்தால் பயங்கரவாதிகள் எச்சரிக்கை அடைந்து விடுவார்கள் என்பதால் அனைத்து நடவடிக்கைகளும் அணு விஞ்ஞான சூத்திரம் போல் பரம ரகசியமாக வைக்கப்பட்டன.
மேற்கே விரிந்திருந்த நிழல் மெல்லமாய்ச் சுருங்கி கிழக்கில் விரியத் தொடங்கி இருந்தது. இதுவரை நல்லதோ? கேட்டதோ? எந்த செய்தியும் பரமனின் செவிகளில் விழவில்லை. ஒவ்வொரு இடமாய்ச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்ப்பார்வை இட்டு வந்த பரமனின் ஆழ்மனதோ சுழலில் சிக்கிய படகாக இரண்டு லட்சத்திற்கான பொருளை ஆராய்வதிலேயே பம்பரம் எனச் சுழன்றது.கதிரவன் கீழ் வானத்தைத் தொடத் தொட எந்த நேரம் என்ன நேரும் என்ற சந்தேகங்கள் பரமனின் மனத்தில் பயமாய் உருவெடுக்க.. ஒவ்வொரு கணமும் பரமனுக்கு பாரமானது.
அப்பொழுது”கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா இல்ல ஓடி பொய் கல்யாணந்தான் கட்டிக்கலாமா”என்று சட்டைப் பைக்குள் சிணுங்கிய கை பேசியை அவசரமாய் அங்கீகரித்தார். சில நொடிகளில் பரமனின் கண்கள் இரையைக் கண்ட வேங்கையென விரியத் தொடங்கியது. பயங்கர ஆயுதங்களுடன் ஒருவனை தொடர்வண்டி நிலையத்தில் பிடித்திருப்பதாகவும், அவனைச் சோதனை செய்ததில் அவனிடம் லதா திரை அரங்கிற்குச் செல்வதற்கான வரைபடம் கையகப் படுத்தபட்டிருப்பதாகவும் மறுமுனை செய்தி உரைத்தது. இருண்ட குகையில் பாதை தெரியாமல் அல்லுற்றவன் கையில் அகல் விளக்காய்க் கிடைத்தது பரமனுக்கு இந்தச் செய்தி. தனக்கு கிடைத்த பேக்சில் தீன் காம்ப்ளெக்ஸ் என்று குறிபிட்டிருந்தது அந்த ஊரில் மொத்தம் உள்ள மூன்று திரை அரங்கு வளாகங்களைத் தான் என்று முடிவு செய்தார். பிறகு பரமனின் கட்டளையின் பேரில் அனைத்து படையினரும் தீபாவளி கூட்டத்தில் திருவிழாக் கண்டிருந்த மூன்று திரையருங்களைச் சென்றடைந்தனர்.
பலத்த பாதுகாப்புக்கும், கண்காணிப்புக்கும் மத்தியில் மதியக் காட்சியில் அரங்கேறின. முழு விபரம் தெரியாததும், தீபாவளி வசூலும் காட்சிகளை நிறுத்துவதற்குத் தடை ஆகின. எந்த ஒரு விபரீதமும் இல்லாமல் நாள் நகர்ந்து கொண்டிருக்க..இரை விழுங்கும் அரவம் என அந்த நாளை இருள் மெல்ல விழுங்கத் தொடங்கி இருந்தது.
அனைவரின் மனதிலும் இது வெறும் மிரட்டல் என்ற எண்ணம் மெல்ல மேலெழும்பத் தொடங்கியது. ஆனால் பரமனுக்கு மட்டும் அந்த தகவல் பொய்யென்று எண்ணும் எண்ணம் கூட எழவில்லை.
நிமிடங்கள் கரைந்தன, முழுதாய் மறைந்த சூரியன் பூமிக்குப் பரிசாய் இருளைத் தந்து செல்ல, மின்னொளியில் மிதக்கத் தொடங்கியது அந்த நகரம். அனைத்து திரை அரங்குகளிலும் ஏழு மணிக் காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகத் தொடங்கி இருந்தன. தீபாவளி என்பதால் கடைசிக் காட்சிக்கு சீட்டு வாங்க இப்பொழுதே சீனியைச் சுற்றும் எறும்பாக கூட்டம் திரை அரங்க வளாகத்தைச் சுற்றத் துவங்கி இருந்தது.உள்ளிருக்கும் ஆபத்தை உணராமல் ஆட்டம், பாட்டம், அபிஷேகம் என கலை கட்டின திரை அரங்குகள்.
ஆம் இத்தனை பாதுகாப்புக்கு மத்தியிலும் ஒவ்வொரு திரை அரங்கிலும் நான்கு பயங்கரவாதிகள் நுழைந்திருந்தனர். இரண்டு நாட்களாக இவர்களது ஆட்கள் குருவி சேர்ப்பது போல் கொஞ்சம் கொஞ்சமாக தேவையான ஆயுதங்களை உள்ளெடுத்து வந்து மறைவான இடத்தில் பதுக்கி இருந்தனர். படம் ஆரம்பித்த முப்பது நிமிடத்தில் அனைவரும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தாக்குதலுக்கு தயார் நிலையில் பிரிந்து சென்று ஆளுக்கொரு கதவோர இருக்கையில் அமர்ந்தனர்.
அதே வேலையில் பரமனின் வண்டி பாரபட்சமற்ற நகர நெரிசலில் சிக்கி வசந்த் & கோ வின் முன் ஆமை என நகர்ந்துகொண்டிருந்தது. அங்கு பள்ளிக் குழந்தைகள் போல் சிறியது முதல் பெரியது வரை வரிசைப் பட்டிருந்த வண்ணத் தொலைக்காட்சிகளில் தொடங்கவிருந்தது சன் தொலைக்காட்சியின் 7.30 மணிச் செய்தி அறிக்கை. வண்டியின் முன் சாலரத்தில் தலை சாய்த்துக் கொண்டு எண்ணற்ற நிகழ் தகவுகளைக் கணக்கிட்டுக் கொண்டிருந்த பரமனின் கண்கள் அந்த தொலைக்காட்சிகளின் மேல் சரிந்தது. அப்பொழுது நொடிக்கொரு முறை உருமாறிக் கொண்டிருந்த எண்கள் இருளில் கரை காட்டும் மின்னலெனப் புரியாமல் இருந்த புதிர்கள் அனைத்தையும் புரிய வைத்தது. ஆம் செய்திக்கு முன்னாள் 19:29:30 31, 32 என்று மாறிய நொடிகள் இரண்டு லட்சம் என்பதற்கான அர்த்தம் தாக்குதல் நடத்தப் படும் நேரம் இரவு 8 மணி என்பதைப் பரமனுக்குப் புரிய வைத்தது.
அடுத்த சில நொடிகளில் பரமனின் கட்டளைகள் காற்றலையில் பறக்க அனைத்து படையினரும் தாக்குதலுக்கு ஆயத்தமாயினர்.அடுத்த பதினைந்து நிமிடத்தில் மூன்று திரை அரங்கிலும் இடைவேளை விடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. திரை அரங்கின் வெளியில் காத்திருந்தவர்கள் கனப்பொழுதில் கலைக்கப்பட்டனர். அடுத்த பத்து நிமிடத்தில் கூடுதல் படையினர் பரமனின் உத்தரவின் பேரில் மூன்று திரை அரங்குகளையும் வந்தடைய போர்க்கோலம் பூண்டன திரை அரங்குகள்.
அனைவரும் அவரவருக்கென கட்டளை இடப்பட்ட இடத்தில் சொன்னதைச் செய்யும் இயந்திரன் போல் குடிகொள்ள, சரியாக 7.45 க்கு இடைவேளை விடப்பட்டது. அடுத்த பதினைந்து நிமிடத்தில் தாக்குதல் நடத்த தயாராய் இருந்த பயங்கரவாதிகளை இந்தத் திடீர் இடைவேளை திடுக்கிடச் செய்தது. அதே நேரத்தில் அனைத்துக் கதவுகளிலும் தயார் நிலையில் இருந்த படையினர் வெளியில் வந்த அனைவரையும் சோதனையிட்டு பிறகு விசாரணைக்காக அனைவரையும் ஓர் கல்யாண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அதற்குள் மாற்றுடையில் இருந்த படையினர் அரங்குக்குள் நுழைந்து தங்களது கண்களை வேட்டையாட களமிறக்கினர். அடுத்த ஐந்து நிமிடத்தில் அவரவர் கண் வலையில் சிக்கிய பயங்கரவாதிகளின் அருகில் நிலை பெயர்ந்து அனைவரும் தாக்குதலுக்கு தயார் ஆயினர்.
மூன்று திரை அரங்குகளிலும் சரியாக திட்டமிட்டபடி 7.55 மணிக்கு தாக்குதல் தொடங்கப் பட்டது. சில வினாடிகளின் மறைவில் சில குண்டுச் சத்தங்களின் செலவுடன் அனைத்து பயங்கரவாதிகளும் கைது செய்யப் பட்டனர். ஒரு வழியாக மிகப்பெரிய அளவில் திட்டமிடப் பட்டிருந்த தாக்குதல் ஒரு சிலருக்கு ஏற்பட்ட காயங்களுடன் பெரும் சேதமின்றி முறியடிக்கப் பட்டது.
கிட்டத்தட்ட எட்டு மணி நேரத்திற்குப் பிறகு இப்பொழுதான் பரமனின் கண்கள் சற்று குளிர்ந்திருந்தது. அடுத்து பத்திரிகைகளுக்கு கொடுப்பதற்காக ஒரு புதுக் கதையை தயார் செய்து கொண்டிருந்தார்….
No comments:
Post a Comment