Friday, November 21, 2008

பாதை மாறிய பயணம்..

எங்களது அபார்ட்மென்டில் எங்களுடன் தங்கி இருந்த பிரேம் அந்த வார இறுதியில் தனது புது வேலைக்காக கலிபோர்னியா செல்வதாக இருந்தது.  அவன் இதுவரை ஒரே மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேல் இருந்ததில்லை, டாலசும்   அதற்க்கு விதி விலக்கல்ல.  எங்களது நண்பர் வட்டத்தில் இருந்து யார் கிளம்பினாலும் ஒரு நாள் கூட்டாஞ்சோறு வைத்து அனைவரும் ஒன்றாக சாப்பிடுவது வழக்கம்.  இதுவே எங்கள் வழக்கமாகிவிட.  எதையும் கொஞ்சம் வித்யாசமாக(விபரீதமாக) செய்ய நினைக்கும் செந்தில், ஒரு நாள் என்னிடம்…..

செந்தில்:  டேய் மாமா இந்த கூட்டான் சோறு மொக்க போடுதுடா இந்த தடவ
                       ஏதாவது வித்யாசமா பண்ணலாமா….
நான்:          வித்யசமானா என்ன??  அப்துல் கலாமை கூப்பிட்டு விருது கொடுக்க  
                      சொல்லலாமா???
செந்தில்: டேய் என்ன கெட்ட வார்த்தையில் திட்ட வெக்காத..  வித்யாசமா 
                     அப்படினா சமைச்சுட்டு வேற எங்கையாவது வெளிய போய் சாப்பிடலாமா
நான்:         எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல… எல்லாருக்கும் சம்மதம் அப்படினா சரி 


(இதனால் பின்பு ஒருபெரிய விபரீதம் நடக்கும் என்பது எங்களுக்கு தெரிய நியாயம் இல்லைதான்)

 

 ஒரு வழியாக எல்லோரும் இந்த யோசைனைக்கு செவிசாய்த்தனர்.  அந்த வாரம், சனிக்கிழமை காலையில் கூட்டான் சோறு ஏற்பாடு தட புடலாக  நடந்து கொண்டிருந்தது.  உண்மைய சொல்லனும்னா எனக்கு உருப்படியா சமைக்க தெரியாது.  காய்கறி வெட்டுவது, பாத்திரம் கழுவுவது இந்த மாதிரி எடு புடி வேலைகள் செய்தே இதுவரை காலத்தை ஒட்டிட்டேன்.  இந்த முறையும் எங்கள் வீட்டில் சமையலை(காய்கறி வெட்டிவிட்டு) முடித்துவிட்டு ஒவ்வொரு வீடாக உலா சென்றேன்.  ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் கலக்கி கொண்டிருந்தார்கள். ஒவ்வொன்றையும் ருசி பார்த்து விட்டு ஒரு வழியாக மதியம் இரண்டு மணிக்கு எங்கள் வீடு வந்து சேர்ந்தேன்.


மூன்று மணிக்குள் அனைவரும் சமையலை முடித்து விட்டு கிளம்ப வேண்டும் இதுதான் எங்களது திட்டம்.  சொன்னதை விட ஒரு மணி நேரமாவது தாமதமாக கிளம்புவதுதானே எழுதப்படாத விதி.  அன்றும் அது போலதான் நான்கு மணிக்கு ஒரு வழியாக அனைவரும் வீட்டிலிருந்து கிளம்பினோம்.  
அன்று எங்களிடம் மூன்று கார்கள் தான் இருந்தது, பிரேம் கலிபோர்னிய செல்வதால் அவனது வண்டியை முன்பே அங்கு அனுப்பிவிட்டான் அதனால் நாங்கள் பத்தொன்பது பேர் மூன்று கார்களில் போக வேண்டிய நிலை.  சரி ஒரு வண்டி மட்டும் போய் விட்டு திரும்பி வந்து மற்றவர்களை அழைத்து செல்லட்டும் என்று முடிவு செய்து கிளம்பினோம். 

 

நான் கிரிக்கெட் மட்டை, கால்பந்து எல்லாம் எடுத்து கொண்டு முதல் வண்டியிலேயே கிளம்பி விட்டேன்.   நாங்கள் போவதாக முடிவு செய்திருந்தது எல்மோ என்றொரு ஏரி கரை.  முக்கிய சாலையில் இருந்து கட்டுக்குள் ஒரு மூன்று மைல் செல்ல வேண்டும்.  முக்கிய சாலையில் இருந்து பிரிந்த உடனே ஒரு நுழைவாயில் அங்கே ஆளில்லா ஒரு தானியங்கி கதவு.  அங்கே இருந்த இயந்திரத்தில் பணத்தை போட்டு நுழைவு சீட்டை எடுத்து கொண்டு உள்நோக்கி சென்றோம்.  அது இலை உதிர் காலம் ஆதலால் விஷ்வரூபம் எடுத்து வியாபித்திருந்தது இணையில்லா இயற்கை எழில்.  இதை ரசித்து கொண்டே செல்கையில் பாதை மாறி ஒரு மண் சாலையில் சென்று விட்டான் என் அருமை நண்பன்.  பிறகு மீண்டும் வந்த வழியே சென்று சரியான பாதையை பிடித்து ஏரியை அடைந்தோம்.


எங்கள் நால்வரையும் அங்கு இருக்க வைத்து விட்டு மற்றவர்களை அழைத்து வர கிளம்பியது நாங்கள் வந்த வண்டி.  எங்கள் நால்வரில் சந்திரனுக்கு அவனது வீட்டில் பெண் பார்த்து கொண்டிருந்தார்கள், பெண் வீட்டாருக்கு அனுப்புவதற்கு நீண்ட நெடு நாட்களாக பல கோணங்களில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தான்.  இன்றும் அவனது முயற்சி தொடர்ந்தது எனவே செந்திலை அவனுடன் அனுப்பிவிட்டு .  நானும், மாரியும் அமர்ந்து அமைதியாக இயற்கையின் அழகை எங்களுள் கிரகித்து கொண்டிருந்தோம்.

 

மாலைக் கதிரவனின் பொன் வண்ண கதிர்கள் 
சாரல் மழையின் தூரல்களை சின்னதாய் சீண்ட
சிலிர்த்து எழுந்தது வான் வரைந்த வண்ண வில் 
மிளிர்ந்து ஒளிர்ந்தது மலர் நனைத்த பனித்துளி!!!!

 

இவ்வாறு நாங்கள் இயற்கையை தரிசித்து கொண்டிருந்த போது வந்து சேர்ந்தன  மூன்று வண்டிகள்.  அப்பொழுது யாரோ முனுமுனுப்பது என் காதில் விழுந்தது, அருகிலோ யாருமில்லை எங்கே இருந்து வருகிறது இந்த முனுமுனுப்பு என்று கூர்ந்து கவனித்தால் அது வேறு எங்கும் அல்ல  கண்ணுக்கு விருந்து கிடைத்த உடனே என்னை மறந்துவிட்டயோ?? என்று முனுமுனுத்து கொண்டிருந்தது என் வயிறு.  சரி வந்த வேலையை பார்ப்போம் என்று அனைவரும் களத்தில் இறங்கினோம்….

 

பசும்புல்லின் மேல் போர்வை விரித்து
பாங்காக அதில் பதார்த்தங்கள் வைத்து
எதை விடுத்து எதை எடுப்பது என்றறியாது
மூக்கு வரை முட்டி தின்றுவிட்டு
இரை விழுங்கிய அரவம் போன்று
நகர முடியாமல் நெளிந்து கொண்டிருந்தோம்!!!!!!!

 

உண்ட மயக்கத்தில் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு பிறகு விளையாட தொடங்கினோம்.  சந்தோசத்திற்காக ஆரம்பித்த கிரிக்கெட் போட்டி என்றாலும் ஆட்டம் முடிவதற்குள் ஏகப்பட்ட சண்டைகள்.  இறுதியாக நான் இருந்த அணி வெற்றி பெற்றது.  அனைவரும் குதித்து கலியாட்டம் போட துவங்கினோம்.  அதற்குள் கதிரவன் கண் மறைய காரிருள் சூழ துவங்கி இருந்தது.  சரி இதற்க்கு மேல் இங்கு இருக்க வேண்டாம் என்று அனைவரும் கிளம்ப தயாராகினோம்.  வந்தது போல் அல்லாமல் முதலில் பதினைந்து பேர்களை ஏற்றி கொண்டு மூன்று வண்டிகளும் சென்றன.  முத்து மட்டும் திரும்பி வந்து எங்களை அழைத்து செல்வதாக இருந்தது.  நான், செந்தில், சந்திரன், மாரி ஆகிய நால்வரைத் தவிர அனைவரும் கிளம்பிச் சென்றனர்.  நாங்களும் ஏதோ தியாகிகளை போல அவர்களை அனுப்பி விட்டு அங்கே காத்திருந்தோம்.

 

அன்று எல்லாம் நல்ல படியாக முடிந்திருந்ததால் செந்திலுக்கு ஏக சந்தோஷம்.  அது மட்டும் அல்ல அன்று இரவு அவனுக்கு நிச்சயம் ஆகி இருந்த பெண் அவனிடம் பேசுவதாக இருந்தது.  அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.  அதற்குள் நாங்கள் இருந்த இடத்தை விட்டு சிறிது தூரம் வெளியே வந்திருந்தோம்.  வீட்டிலிருந்து  வரும்பொழுது பாதையை சரியாக கவனிக்காததால் நாங்கள் வந்த வழி எதுவென்றே எங்களுக்கு மறந்திருந்தது.  சரி ஏதோ ஒரு சாலையில் சிறிது தூரம் காலார நடப்போம் என்று நடக்க தொடங்கினோம்.  அப்பொழுது…

 

செந்தில்: டேய் சுத்தி வெறும் காடா இருக்குடா பேசாம நம்ம இருந்த எடத்துக்கே 
                     போய்டலாம்
நான்:         என்னடா புது மாப்பிள்ளை ஆன உடனே ரொம்ப பயபட்ற, சும்மா வாடா
செந்தில்: டேய் இவ்ளோ இருட்டுல எது வந்தாலும் தெரியாதுடா!!!

(சிறிது நேரம் கழித்து)

நான்:         டேய் என்னடா ஒரே காடா இருக்கு ஒரு வெளிச்சம் கூட இல்ல
செந்தில்: அதாண்டா நானும் சொல்றேன் வாடா பேசாம போய்டலாம்

 

நால்வரையும் பயம் கவ்விக்கொள்ள இருந்த இடத்திற்கே திரும்ப சென்றோம்.  ஒரு அறை மணி நேரத்தில் அந்த இடம் அதி பயங்கரமாக மாறிஇருந்தது.  எங்கும் நிசப்தம், வாழ்கையில் முதல் முறையாக இப்படி ஒரு அனுபவம்.  ஒவ்வொரு நொடியும் யுகமாக கடந்தது,  ஆட்டோ மீட்டர் போன்று நொடிக்கு நொடி பயம் அதிகரித்து கொண்டிருந்தது.  பொறுமை இழந்து முத்து வை அழைக்கலாம் என்று கைபேசியை எடுத்தேன் அப்பொழுது செந்திலுக்கு ஒரு அழைப்பு.  வேறு யாரும் அல்ல அது முத்து தான், ச்ச்!!!  அப்பா ஒரு வழியா முத்து வந்துட்டான் அப்படின்னு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம்.  விட்ட மூச்சு காற்றில் கலப்பதர்க்குள் ஓர் அதிர்ச்சி செய்தி எங்கள் காதில் விழுந்தது..

இந்த காட்டிற்குள் நுழைவதற்கு இருந்த ஒரே நுழைவாயில் பூட்ட பட்டிருந்தது.  முத்து நுழைவாயிலில் இருந்துதான் செந்திலை அழைத்திருந்தான்.  அப்பொழுது மாரி, "உள்ள வரும்போது ஒரு தகவல் பலகை பாத்தேண்டா அதுல இங்க ஆறு மணிக்கு மேல இருக்க கூடாதுன்னு எழுதி இருந்திச்சு" என்று கூறினான்.  வந்த வழியும் நினைவில் இல்லாததால் செய்வதறியாது அதிர்ந்து நின்றோம். 

 

அங்கு நிற்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து காத்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் எங்களுக்கு புரிந்தது.  முத்துவிடம் எப்படி நடக்க வேண்டும் என்று வழி கேட்டு கொண்டு மெதுவாக அந்த வழியில் நடக்க ஆரம்பித்தோம்.  ஒரு பத்து நிமிடம் நடப்பதற்குள் செந்திலின் கைபேசி சக்தி குறைந்து முடங்கி போனது.  சரி என்று எங்களுடைய கைபேசியை எடுக்க சென்ற போதுதான் தெரிந்தது எங்களது கைபேசியை காரிலேயே வைத்து விட்டோம் என்பது.

எல்லாம் எதிர் மாறாக நடக்க கையில் இருந்த கேமராவை ஆன் செய்து விட்டு(எது நடந்தாலும் ஒரு சாட்சி வேண்டுமல்லவா?), வீடு திரும்புவோம் என்ற நம்பிக்கை துளியும் இல்லாமல் எங்களுக்கு தெரிந்த வழியில் நடக்க ஆரம்பித்தோம். 

 

கண்கள் திறந்திருப்பதை கூட கையில் தொட்டு தெரிந்து கொள்ளும் அளவிற்கு இருள் சூழ்ந்திருந்தது.  காலணிகளை கூட எடுத்து கையில் பிடித்து கொண்டு பாம்பு போல் சலனம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தோம்.  அந்த நேரத்தில் என் மனதில் ஓடிய சில சிந்தனைகள்….


"நாம் செல்லும் வழி தவறானதாக இருந்தால்?"
"இங்கு நர மாமிசம் உண்ணும் மனிதர்கள் இருப்பதாக படித்து இருக்கிறோமே"
"எனக்கு ஏதாவது நடந்து விட்டால் என் அம்மாவின் நிலை"
"முத்து தனியே நிற்க பயந்து திரும்ப சென்றிருந்தால்"

 


இவ்வாறு பரவ விட்டிருந்த என் சிந்தனையை ஒருங்கே இணைத்தது ஒரு கூக்குரல்.  இதயம் படபடக்க ஒருவர் கையை ஒருவர் பிடித்து கொண்டு ஐம்புலன்களையும் கூர்மையாக்கி கொண்டு தொடர்ந்து நடக்கலானோம்.  ஒரு பதினான்கு அடி நடந்திருப்போம் மீண்டும் கேட்டது அதே கூக்குரல், இம்முறை கூர்ந்து கவனித்ததினால் அது ஆந்தையின் அலறல் என்று உணர முடிந்தது. 

 

அவ்வளவு குளிரிலும் என் கையை நனைத்திருந்தது என் கரம் பற்றி இருந்த செந்திலின் வியர்வை.  நேரத்திற்கு நேரம் எங்கள் நடையின் வேகம்(பயம்) அதிகரித்துகொண்டே இருக்க, திடீர் என்று தார் சாலையை விடுத்து மண் தரையில் நடப்பது போன்று ஒரு உணர்வு.  கூர்ந்து கவனித்தால் மதியம் வரும்பொழுது வழி தவறிச் சென்ற அதே மண் சாலையில் சென்றிருந்தோம்.   இது வரை வந்த பாதை சரி என்று உணர்ந்தவர்களாய், சிறு நம்பிக்கை மனதில் அரும்ப புத்துணர்வுடன்   வந்த பாதையிலேயே நடக்க துவங்கினோம்.


அங்கிருந்து ஒரே நேர் சாலைதான் நுழை வாயில் செல்வதற்கு.  ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் குளிர் மிகவும் அதிகரித்து விடும் என்பதால் மிக வேகமாக நடக்க ஆரம்பித்தோம்.

 

சிறிது நேரத்தில் எதையோ கண்டு திடுகிட்டவர்கலாய் உறைந்து நின்றோம்.  யாரோ ஒருவன் விளக்கை பிடித்து அமர்ந்திருப்பது சிறிது தொலைவில் தெரிந்தது.  எண்ணற்ற கேள்விகள் நெஞ்சில் எழ, படபடப்பின் உச்சியை எட்டி இருந்தது என் இதய துடிப்பு.  எப்படி இருந்தாலும் அவனை கடந்துதான் நாங்கள் நுழைவாயிலுக்கு சென்றாக வேண்டும் எனவே வேறு வழி இன்றி அவனை நோக்கி மெதுவாக நடக்கக் ஆரம்பித்தோம்.  மரண பயம் என்ற வார்த்தையை எவ்வளவோ முறை உபயோகித்திருக்கிறேன் ஆனால் இன்றுதான் முழுமையாக அதை உணர்ந்திருக்கிறேன்.  மெதுவாக ஊர்ந்து சென்று அந்த வெளிச்சத்தை அடைந்த போதுதான் அது வெறும் விளக்கு என்பது புரிந்தது.  "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பது போல் எதை பார்த்தாலும் பயமாக இருந்தது. 

நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த வெளிச்சத்தில் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.  பயத்தை மறைக்க பொய்யாக புன்னகைத்து விட்டு மீண்டும் கிளம்பினோம்.  இப்பொழுது பயம் சற்று குறைந்திருந்தது ஆனால் குளிர் எங்களின் விரல் நுனிகளை உணர்விழக்க வைத்திருந்தது. 

 

திடீரென்று எதையோ கண்டவர்களாய் கோர்த்திருந்த கைகளை உதறிவிட்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம் எடுத்தோம்.  ஆம் முத்து நுழைவாயிலில் அவசர விளக்குகளின் ஆதரவுடன் தனது வண்டியில் இருப்பது தெரிந்தது. 

 

கண்ணிமைக்காத என் காதலியின் கடைக்கண் 
பார்வையில் நான் காய்ந்திருந்த போது கூட 
அடைந்ததில்லை இந்த அளவற்ற ஆனந்தத்தை!!!!

 

உவமையில் அடங்கா அந்த மகிழ்ச்சியுடன் சென்று முத்துவை அனைவரும் அனைத்து கொண்ட போது கண்களில் சிறிது கண்ணீர் கசியத்தான் செய்தது.


சரி அங்கு நின்று ஒரு புகைப்படம் எடுதொகொண்டு கிளம்பலாம் என்று காமேரவைத் தேடிய போதுதான் தெரிந்தது காமெராவையும் காணவில்லை அதை வைத்திருந்த மாரியையும் காணவில்லை.  ஓடி வரும்பொழுது கூட அவனை பார்த்திருக்கிறான் சந்திரன்.  
உடனே காவல் துறைக்கு அழைப்பு விடுத்துவிட்டு உயிரை துச்சமாய் மதித்து மீண்டும் அந்த காட்டுக்குள் சென்று அவனை தேட தொடங்கினோம்.  இன்றுடன் அவனை தேட ஆரம்பித்து ஒரு வாரம் முடிகிறது இன்னும் ஒரு தகவலும் இல்லை. 
இந்த விஷயத்தை யார் மாரியின் வீட்டில் சொல்வது…

கடல் கடந்து தனது கணவனை காண கண்களில் காதலுடன் காத்துகொண்டிருக்கும் 
அவனது புது மனைவியின் கனவுகளை யார் கலைப்பது,  
மகனுக்காக தனது வாழ்க்கை முழுதும் உழைத்துவிட்டு இன்று மகனின் நிழலில் ஓய்வு எடுத்துகொண்டிருக்கும் அவனது தந்தையின் நிம்மதியை எப்படி பாழாக்குவது,
தன் மகனையே உலகமாய் நினைத்து இருக்கும் அவனது தாய்க்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்வது..

 

எதுவும் புரியாதவனாய் என் அறையில் இருந்த ஆளுயர கண்ணாடியில் என்னையே வெறித்துப் பார்த்து கொண்டிருக்கிறேன்…


No comments: