Thursday, August 6, 2009

குறிஞ்சி மலர்கள்..

பெருமழையின் முடிவில் புரளும் புது வெள்ளமென ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது எனதுள்ளம். வெள்ளி மாலை, சொகுசுப் பேருந்தின் சன்னலோரப் பயணம், முகம் வருடும் குளிர்தென்றல் காற்று, இளைராஜாவின் இன்னிசை, மூன்று நாள் விடுமுறை, சொந்தச் செலவில் முதல் தீபாவளி இவை அனைத்தையும் தாண்டி எனது ஏகாந்ததின் ஏகாதிபத்தியத்திற்க்கு மற்றொரு காரணமும் இருந்தது…

கால ஓட்டம் கற்றுத்தரும் சுயநலக் கோட்ப்பாடு கற்றறியாத பள்ளி வாழ்வின் பிரிவு உபச்சார நாள் அன்று. ஒரு சிலர் கையில் பிரிவுப் பதிவேட்டுடன் ஆளுக்கொரு மூலையில் ஏதோ காவியம் படைப்பது போல் அழுத்தமான சிந்தனையில் இருந்தனர். நாங்களும் எங்கள் பங்கிற்க்கு வகுப்பறைக் கிரிக்கெட் விளையாடி நாளைத் தள்ளிக் கொண்டிருந்தோம். இன்னும் சிலர் மாலை நடக்கவிருக்கும் பிரிவுபச்சார விழாவிற்க்கான ஆயத்தப் பணிகளில் நாட்டாமை செய்து கொண்டிருந்தனர்.

பகலவன் மெல்ல பூமிக்குள் புதைய மாலை மங்கத் தொடங்கியிருந்தது. சட்டென அனைவரும் ஒன்று சேர்ந்து ஆளுக்கொரு வேலையைப் பகிர அரை மணி நேரத்தில் அத்தனையும் தயார்.

சிறிது நேரத்தில் எங்கள் ஆசிரியர்கள் ஒவ்வொருவராய் வந்து சேர இறுதியாய் வந்தமர்ந்தார் பள்ளி முதல்வர். முதல்வரின் மனைவி குத்து விளக்கேற்ற மகளிர் அணியின் “பச்சை மயில் வாகனனே சிவ பாலசுப்ரமணியனே வா…” என்ற பாடலுடன் தொடங்கியது எங்கள் நினைவை விட்டு அகலா அந்த மாலைப் பொழுது…

க்ர்ர்.. க்ர்ர்.. சட்டைப்பைக்குள் உதறியது பேச்சுரிமை மறுக்கப்பட்ட எனது கைபேசி. நேற்று அலுவலகத்தில் அமைதியாக்கப்பட்ட கைபேசி அப்படியே இருந்தது. தூக்கத்தில் தவழ்ந்த கைகளுக்கு பாதி திறந்த கண்கள் ஒதுழைக்க மறுக்க அலறல் அடங்கியது. உதரல் நின்ற மகிழ்ச்சியில் மயங்க முயன்ற கண்களுக்கு இப்பொழுது இடையூறு காதுகளிடமிருந்து.

“முர்ர்றுக்கு,, முர்ர்றுக்கு,,, மணப்பாற அர்ர்ரிசி முர்ர்றுக்கேய்…”

“வெல்றி வெல்றி.. வெல்றி வெல்றி.. ரூபைக்கு ரெண்டு பிஞ்சு வெல்றி…”

என ஆசிரியர் அற்ற வகுப்பறை என ஆங்காங்கே குரல்கள் முளைக்க அடியேனின் தூக்கம் அம்பேல். சுமார் ஒன்பது மணி நேரத்திற்க்குப் பிறகு சென்னையில் மூடிய கண்கள் மணப்பாறையை தரிசித்தது.

கண்கள் மெல்ல கைக் கடிகாரத்தில் விழ நேர்கோட்டில் நீண்டிருந்த முற்கள் மணி ஆறு என்றறிவித்தன. முறுக்கு விற்பனையாளர் அது மணப்பாறை தொடர்வண்டி குறுக்கீடு என்பதை உணர்த்த, பரீட்சையில் தூங்கியவன் பாதியில் எழுந்தது போல் படபடத்தவன் இருண்டிருந்த கைபேசிக்கு ஒளியளித்து உற்றுப் பார்த்தேன் .

12 அங்கீகரிக்கப் படாத அழைப்புகள்…

இரண்டுமுறை பச்சை பொத்தானை அழுத்தி அழைப்புப் பட்டியலில் இருந்த முதல் எண்ணிற்க்கு அழைப்பு விடுத்தேன்..

வரதன்: டேய் பருத்திக்கொட்ட எங்கடா இருக்க… நீ மட்டுந்தான் இன்னும் வரல கால் பண்ணா கூட எடுக்க முடியாதா….

நான்: இல்லடா வந்துட்டேன் மணப்பாறைல இருக்கேன்.. இன்னும் ரெண்டு மணி நேரத்துல வந்திருவேன்.. நேத்து ராத்திரி ஏதோ பிரச்னையாம் அதான் கொஞ்சம் நேரமாயிடுச்சு…

வரதன்: ஒரு நாள் முன்னாடியே வாடானு சொன்னா இப்போ வந்து அதுல பிரச்ன இதுல ப்ரச்னைனு சொல்லு..

எப்படியோ வந்து தொல

நான்: டேய் நேத்து ப்ராஜக்ட் ப்ரொடக்சன் போச்சுடா…

பதிலைப் பரிசீலிக்காமல் சட்டென மறையும் மின்னலென அழைப்பு துண்டிக்கப் பட்டது. என்னை இவ்வளவு உரிமையுடன் திட்டவும் கோபிக்கவும் யாரால் முடியும்… எனது பள்ளி நண்பன் வரதன் தான் வந்தது அழைப்பில்.

ஒன்பது மணிக்கு நான் கண்டிப்பாக அங்கிருக்க வேண்டும் இல்லையெனில் என் உற்ற நண்பர்களின் நிரந்தரக் கோபத்துக்கு ஆளாவதுடன் அந்தத் தருணத்திற்க்கான இரண்டு வருடக் காத்திருப்பும் கானல் நீராகும்….

மணப்பாறையிலிருந்து பழனி செல்ல குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும் எனவே எப்படியும் ஒன்பது மணிக்குள் சென்று சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையின் பிறப்பில் தொடர்வண்டியின் கடைசிப் பெட்டி தடதடத்துக் கடக்க முஸ்தபா பாடலுடன் கிளம்பியது வண்டி…..

ஆசிரியர்களின் அழுத்துப் போன அறிவுரைகளும்.. முதல்வரின் தற்ப்பெருமைப் பறைசாற்றல்களும் ஒரு வழியாய் முடிந்தவுடன், ஆசிரியர்களும் பள்ளி ஊழியர்களும் பந்தியில் நிறைந்தனர். பின்னனியில் மெல்ல முளைத்து மனங்களை வருடத் தொடங்கியிருந்தது நட்பின் தேசிய கீதமான முஸ்தபா பாடல்..

சிறிது நேரமாய்த் தரையைத் தோண்டிய என் கண்கள் என்னை மையப்படுத்தி இட்ட அரை வட்டத்தில் அகப்பட்ட முகங்கள் அத்தனையும் ஆராத் துயரில். ஆசிரியர்கள் அனைவரும் மெல்ல அகல அடுத்த பத்து நிமிடம் முற்றுப் பெறும் ஒரு கூட்டுக் கிளி உறவுக்கான மௌன அஞ்சலியில் கழிந்தது.

எங்கள் யாருக்கும் அமைதி காக்கும் ஆசை இல்லை ஆனால் இன்று அதை உடைக்கும் உரமும் இல்லை. நானும் பலமுறை உடைக்க முயன்று முடியாமல் தோற்றுக்கொண்டிருந்தேன். இறுதியில் எல்லாம் வல்ல பெண்களின் கண்ணீர் எங்கள் இறுக்கத்தைத் தகர்த்தது. முதலில் பெண்களின் கண்களில் கொப்பளித்த நீரூற்று மெல்ல எங்கள் அனைவரின் கண்களையும் ஆறு, குளமாக்கியது.

அதிக விவரம் அறியாத பருவமாயினும் ஏதோ ஒரு இழப்பைச் சந்திக்கவிருப்பதாய் உள்ளுணர்வு ஓங்கி ஒளித்துக் கொண்டிருந்தது. அழுகையின் முடிவில் எங்கள் மனது மேகங்களற்ற விண்வெளியென சற்றுத் தெளித்திருந்தது. அனைவரும் எங்கள் பிரிவின் ரணத்திற்கு மருந்து தேடும் முயற்ச்சியில் மூழ்கினோம். இழப்புகளைத் தாங்க நாம் செய்து கொள்ளும் சிறு சிறு சமாதானங்கள்தான் நம் வாழ்க்கையை பயணிக்கச் செய்கின்றன.. அப்படி ஒரு சமாளிப்புதான் அன்று நாங்கள் தேடியது.

அப்படி ஒரு சமாதானமும் எங்களுக்குக் கிடைத்தானது. ஆம், பதினாலு வருடத்திற்க்கு ஒரு முறைப் பூத்து தன் நினைவை நம் நெஞ்சில் நீர்த்துப் போகாமல் காத்திடும் குறிஞ்சி மலரென இரண்டு வருடத்திற்க்கு ஒருமுறை எங்கள் பள்ளியில் மலர்ந்து எங்கள் நினைவுகளைப் பகிர்ந்து புதுப்பித்துக் கொள்ள உறுதி கொண்டோம்.

இன்று எங்களின் நான்காவது மலர்ச்சி…

உள்ளம் தங்கிய நட்பைக் காண கண்களும்,

புதுக் கதைகள் கேட்கச் செவிகளும் - எங்கள்

நினைவு நிறைந்த நிழலைத் தாங்கத் தரைகளும்

இரு வருடம் கொண்ட ஏக்கம் களையும் நாள்…

பழனி - 20 கி.மீ. அறிவித்த பலகை பின் நகர்ந்து செல்ல என் குரலைத் தாங்கி முன் நகர்ந்தது காற்று…

நான்: டேய் இன்னும் 15 நிமிசத்துல வந்திடுவேன்.. அதுகுள்ள போய்டாதீங்கடா..

வரதன்: சார்.. லேட் ஆஹ் வர்றதும் இல்லம நாங்க வேற காத்திருக்கனுமோ.. நாங்க கெளம்பரோம் எப்படியோ வந்து சேரு..

(பத்து நிமிடத் தாமதம் இவ்வளவு கோபம் தருமானால் இந்த நிகழ்வுக்கு நாங்கள் தரும் முக்கியத்துவம் எத்தகையதென்று புரிகிறதா…)

என்ன சொல்வதென்றறியாது இணைப்பைத் துண்டித்தேன். சில சமயம் பேருந்தில் இருந்து இறங்கி அதற்க்கு முன் வேகமாய் ஓடிப் போய் விடலாம என்ற எண்ணம் கூடத் தோன்றியது. கடைசியாக வண்டி தீபம் உணவகத்தின் முன் என்னை உமிழ்ந்தது. மணி முள் ஒன்பதைத் தொட்டிருந்ததால் இறங்கி பதட்டமாக ஆட்டோ அழைக்க கை நீட்டினேன். நீட்டிய கைகளை உரசிக் கொண்டு நின்றது வரதனின் வண்டி.

வரதன்: ஏறுடா என்ன பராக் பாக்கற…

நான்: இல்ல கெளம்பரதா சொன்னியே..

வரதன்: என்ன பண்ணித் தொலைக்கறது நீயாப் போய்ட்டியே.. சரி ஏறுடா வெண்ண..

வண்டி பாலாவின் வீட்டிற்க்குப் பறக்க அடுத்த பத்து நிமிடத்தில் அனைவரும் பள்ளி வாயிலில். அப்பா.. எங்கள் முகங்களின் தான் எத்தனை மகிழ்ச்சி.. தோற்றங்கள் சிறிது மாறினாலும் எண்ண ஓட்டங்கல் இன்னும் மாறவில்லை. ஒவ்வொருவரையும் கட்டித் தழுவி விசாரித்து, ஓடி ஆடி விளையாடி, பழைய காதலியுடன் நையாண்டி செய்து, வகுப்பறைக் கிரிக்கெட் விளையாடி, அன்று ஆனந்த சாம்ராஜ்யம் கட்டினோம். அக்குதூகலத்தின் சில நொடிகளைக் களவாடி தங்கள் பார்வைக்குப் படைதிருக்கிறேன்…

happy

Happy2

நொடிகளை நீட்டிக்கும் உரிமை எமக்கிருந்திருந்தாள் இந்த நாள் முடிய நாங்கள் அனுமதித்திருக்க வாய்ப்பில்லை…

1 comment:

A.Muthukumar said...

சிறு சிறு சமாதானங்கள்தான் நம் வாழ்க்கையை பயணிக்கச் செய்கின்றன.. அப்படி ஒரு சமாளிப்புதான் அன்று நாங்கள் தேடியது.(நல்ல கருத்து)...